அசுரன் ஆட்சிக்கு வரக்கூடாதென்றே ரணிலை காப்பாற்றினோம்- சுமந்திரன்!

ஒக்ரோபர் அரசியல் குழப்பத்தின்போது, ரணிலின் பதவிநீக்கத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றது தமிழ் மக்களிற்காகவே தவிர, ஐ.தே.கவை காப்பாற்றுவதற்காக அல்லவென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

இன்று மட்டக்களப்பில், தமிழ் தேசி கூட்டமைப்பின் ஆதரவாளர்களிற்கு அசியல் விளக்கமளிக்கும் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றுமையாக உள்ளது. 16 உறுப்பினர்கள் தெரிவாகினோம். இன்று 14 பேராக இருக்கிறோம். 36 போராட்டக்குழுக்கள் இருந்தபோதும், இன்றைக்கு இருப்பதை போன்ற ஒற்றுமையிருக்கவில்லை. தமிழ் பலவற்றை செய்ய முடியவில்லையென்றாலும், ஒற்றுமை குலைந்தால் செய்யக்கூயவற்றை கூட செய்ய முடியாது.

எம்மிடம் இப்போது இரண்டு பலமுள்ளது. ஒன்று- ஒற்றுமையென்கிற பலம். மற்றது- சர்வதேசத்திலிருந்து கொடுக்கப்படும் பலம். இந்த இரண்டு பலம்தான் எம்மிடமுள்ளது. ஆயுத பலம் எம்மிடமில்லை.

எமக்கு இன்று ஆதரவளிக்கும் நாடுகள்தான், முன்னர் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை விதித்தார்கள். இன்றும் அந்த நாடுகளில் தடையுள்ளது. அதேநாடுகள் எமக்கு ஆதரவாக செயற்படுவது ஏனென்றால், நாம் செயற்படும் முறையை- ஜனநாயக முறையில், எதை செய்ய கூடும், செய்யக்கூடாது என்றதை நாம் புரிந்து செயற்படுவதாலேயே அவர்கள் ஆதரிக்கிறார்கள். அதை செய்யாவிட்டால், சர்வதேசத்தின் எதிர்ப்பையும், உள்நாட்டில் பெரும்பான்மையினரின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் உரித்துக்களையே நாம் கேட்கிறோம். நாம் கேட்பது நியாயமான கோரிக்கைகளே. அநியாயமானவை அல்ல. நியாயமான கேள்வியை கேட்கும்போது, நியாயமாக சிந்திக்கும் பெரும்பான்மையினர் இருக்கிறார்கள்.அவர்களுடைய எதிர்ப்பை நாங்கள் சம்பாதிக்க கூடாது. அவர்களின் ஆதரவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எங்களது பிரச்சனை அப்படியான வடிவத்தை பெறாததற்கு ஒரு காரணம், எங்களது அணுகுமுறை அதில் சரியாக இல்லாததும் ஒரு காரணம். சிங்கள மக்கள் மத்தியில் சரியாக எமது கருத்தை சொல்லவில்லை.

1976இல் நாம் தனிநாடு கோரியபோது, சிங்கள மக்கள் பார்த்தார்கள்- எமது கட்சி- சமஷ்டி கட்சி- தனிநாடு கோருகிறது என. தமிழ் அரசு கட்சி, சமஷ்டி கட்சியென்றுதான் பெயர்.

யுத்தம் முடிந்ததன் பின்னர், மஹிந்த ராஜபக்சவை இந்தியா அழைத்து, இனப்பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தியது. அடுத்த வாரம் எம்மை அழைத்து, எமது கோரிக்கைகள் நியாயமானவை என மன்மோகன் சிங் தெரிவித்தார். தனிநாடு தவிர்ந்த அதிகார பகிர்வை மேற்கொள்ள ஆதரவளிப்பதாக தெரிவித்தது.

இதன்பின்னரே, மகிந்த ராஜபக்ச பேச்சை ஆரம்பித்தார். 18 சுற்றுக்கள் பேசினோம். கடைசி 3 நாள் நாம் பேச்சுக்கு பொனோம். அவர்கள் வரவில்லை. முதல்நாள் போனபோதே இனி அவர்கள் வரமாட்டார்கள் என தெரியும். ஆனால், இதை வௌயுலகத்திற்கு காண்பிக்கவே அங்கு சென்றோம்.

13வது திருத்தத்தை அர்த்தமுள்ளதாக ஆக்குவேன் என மஹிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு மூன்று முறை சொன்னார். 13வது திருத்தத்தை அர்த்தமுள்ளதாக்குவேன் என அவர் சொன்னதன் மூலம், 13வது திருத்தத்தில் முழுமையற்றது என்ற எமது கருத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.

அமெரிக்க இராஜாங்க பிரதிநிதிகளை நேற்று சந்தித்தோம். அவர்களிடம் சொன்னோம்- 2011இல் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை நாம் சந்தித்தோம். எம்முடன் பேசிய பின்னரே, இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தீர்கள். ஆனால் இன்று நீங்கள் அங்கு இல்லை. அந்த தீர்மானத்தால் பல விடயங்கள் நடந்துள்ளன. ஆனால், தீர்மானமாக- முடிவாக எதுவும் நடக்கவில்லை. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சொல்லியிருக்கிறது- மீள நிகழாமைக்கான உத்தரவாதமாக ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதாக. அதற்கான முயற்சிகள் மூன்றரை வருடங்களாக நடந்தது. அதில் நீங்களும் பங்களித்திருந்தீர்கள். பிரதமருக்கு அரசியல் துணிவில்லை. ஜனாதிபதிக்கு அறவேயில்லை. அரசியல்
போக்கிரித்தனம்தான் ஜனாதிபதிக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலைமையில், இந்த பணிகளை எப்படி முன்னகர்த்துவது. இதற்கு உங்கள் ஆலோசனை என்ன என சம்பந்தன் ஐயா கேட்டார். நாங்கள் செய்ய வேண்டியவற்றை செய்யவில்லையா என கேட்டார்.

இல்லை, நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக செயற்பட்டிருக்கிறீர்கள், உங்கள் பக்கத்தில் என்றார்கள். அப்படியாயின் இந்த சூழலை முன்னகர்த்த என்ன செய்வதென கேட்டார். அவர்கள் சொன்னார்கள், தேர்தல் வருகிறது, அதற்கு கேடு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றார்கள். அதற்கு ஐயா சொன்னார், இல்லை. கேடு வரக்கூடாது, கேடு வரக்கூடாது என்றே வாக்களித்து நாம் களைத்து விட்டோம். இனி எங்கள் மக்கள் அவர்களிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றோம்.

ஒக்ரோபர் ஆட்சி மாற்றத்தின் பின், பிரதமர் நியமனத்திற்கு எதிராக நாம் நீதிமன்றம் சென்றது எங்களின் மக்களிற்காக. நாம் நீதிமன்றம் சென்றிருக்காவிட்டால் இன்று யார் பிரதமராக இருந்திருப்பார்கள்? ஐதேகவை காப்பாற்ற நாம் நீதிமன்றம் செல்லவில்லை. எமது மக்களை
காப்பாற்றவே சென்றோம். ஐ.தே.விற்கு அதற்கு துணிவில்லை. முதலாவது மனுதாரராக சம்பந்தன் இருந்தார். சம்பந்தன் வந்த பின்னரும், ரணில் மனுதாரராக வரவில்லை. அவருக்கு துணிவிருக்கவில்லை. ஹபீர் ஹாசிம், அகிலவிரைாஜ் காரியவசம் ஆகியோரே மனுதாரராக இருந்தார்கள்.

மைத்திரிபால எம்மிடம் ஒருமுறை சொன்னார்- தமிழ் மக்களை நான் மறக்கவில்லை, அவர்கள் எனக்கு வாக்களித்தனர் என்றார். நான் அதை மறுத்தேன். தமிழ் மக்கள் உங்களிற்கு வாக்களிக்கவில்லை. அவர்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராகவே வாக்களித்தார்கள் என.

ஐ.தே.க. எதுவும் செய்யாவிட்டாலும், பொம்மையாக அவர்களை ஆட்சியில் இருத்தி வைத்திருப்பதன் காரணம்- அவர்களை விட்டுவிட்டால் ஒரு அசுரன் அந்த இடத்திற்கு வந்து விடலாம் என்பதாலேயே என்றார்.