இலங்கையின் அடுத்த ஜனாதிபதி மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவை அறிவித்த பின்னர், மங்கள சமரவீர அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

‘நாடு முழுவதும் வெளிப்படையான, மதச்சார்பற்ற, தாராளமய ஜனநாயகத்தின் சக்திகளை ஒன்றிணைக்கும் ஒரு மனிதரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாவார்.

மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் உண்மையில் என்ன கற்றுக்கொண்டார் என்ற பயங்கரமான உண்மையை இன்று நான் உணர்ந்தேன்.

தனது குடும்பத்திற்கு அதிக அதிகாரங்களைக் கொடுத்தார் என்று அவர் உணரவில்லை. தனது குடும்பத்திற்கு போதுமான அதிகாரத்தை வழங்கவில்லை என்று அவர் தெளிவாக நம்புகிறார்.

அவரது சகாக்கள் பல மில்லியன் ரூபா பொது பணத்தை கொள்ளையிட்டதை அவர் உணரவில்லை. இன்னமும் பால் மிச்சம் இருப்பதாக அவர் நம்புகிறார்.

இந்த நாட்டை அதிகம் பயமுறுத்தியதாக அவர் உணரவில்லை. இந்த நாட்டை போதுமான அளவு பயமுறுத்தவில்லை என்று அவர் தெளிவாக நம்புகிறார்.

நீதித்துறையின் சுதந்திரத்தை அதிகமாக அச்சுறுத்தியதாக அவர் கவலைப்படவில்லை. நீதித்துறையில் எந்தவொரு சுதந்திரத்தையும் அனுமதித்திருக்கக் கூடாது என்று நம்புகிறார்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல்ஆக்கப்பட்டது, லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நொயார் மற்றும் எண்ணற்ற ஊடகவியலாளர்களை கடத்தி சித்திரவதை செய்தது குறித்து அவர் வருத்தப்படவில்லை.

மீதமுள்ள எந்தவொரு சுதந்திர ஊடகவியலாளரும் அதை அறிந்து கொள்ள வேண்டும் என்றே அவர் விரும்புகிறார்’ என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.