அனுராதபுர விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி, விமானங்களை அழித்து சேதங்களை ஏற்படுத்தியதாகவும், அரச படையினரை கொன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு, அனுராதபுர மேல்நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2007 ஒக்ரோபர் 22ஆம் நாள் அனுராதபுர விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் 24 பேர் கொண்ட கரும்புலிகள் அணி கொமாண்டோ தாக்குதலை நடத்தியிருந்தது.

இந்த தாக்குதலில், சிறிலங்கா விமானப்படையின் 10 விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் 6 விமானங்கள் சேதமடைந்தன.

இதனால், சிறிலங்கா அரசாங்கத்துக்கு 4000 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் கரும்புலிகள் அணியைச் சேர்ந்த 21 பேரும், சிறிலங்கா படையினர் 14 பேரும் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் பங்கெடுத்தவர்கள் என்று, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு முன்னாள் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டு, அனுராதபுர மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விமானப்படைத் தளம் மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளுக்கு தகவல் வழங்கினார்கள் என்று இவர்களுக்கு எதிராக தலா 3 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

புருசோத்தமன் அரவிந்தன், ராசவல்லவன் தபோரூபன் ஆகிய இரண்டு முன்னாள் புலிப் போராளிகளும், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டிருந்தனர்.

முதலாவது இரண்டாவது குற்றச்சாட்டுகளை அரவிந்தன் ஏற்றுக் கொண்டிருந்தார். தபோரூபன், தன் மீதான முதலாவது மூன்றாவது குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டிருந்தார்.

இதன் அடிப்படையில், இரண்டு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, அனுராதபுர மேல்நீதிமன்ற நீதிபதி மகேஸ் வீரமன் நேற்று தீர்ப்பளித்தார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், ஒரே நேரத்தில் அனுபவிக்கக் கூடியதாக,  இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், ஏற்கனவே 8 ஆண்டுகள் சிறையில் இருந்த இவர்கள் இருவரையும் விடுதலை செய்யவும் நீதிபதி பணித்துள்ளார்.