‘அப்பத்தா ஊறுகாய் விற்றால் வரி,அதானி உடைய மின்சாரத்துக்கு வரி இல்லை’-சீமான் காட்டம்

பிரதமர் பதவிக்கு மலையாளிக்கு வாய்ப்பில்லை, தமிழனுக்கும் வாய்ப்பில்லை… ஏன் நாம் ஆளக் கூடாதா? என்று சீமான் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

நாம் தமிழர் கட்சி இந்த முறை தனித்து களம் காண்கிறது. இதற்கான பிரச்சாரத்திலும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இறங்கி உள்ளார். ஒவ்வொரு பிரச்சார கூட்டத்திலும் மத்திய, மாநில அரசுகள் மட்டுமில்லாது, அனைத்து கட்சிகளையுமே சரமாரி குற்றஞ்சாட்டி வருகிறார். ஆரணியில் நடைபெற்ற கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

ஒரே நாளில் பணம் செல்லாது என்று நாட்டை நாசமாக்கியவர்கள் இவர். எந்த வர்த்தகமும் நடக்காத மாதிரி செய்து விட்டார்கள். மறுபடியும் மறுபடியும் அநீதியை செய்பவர்களுக்கு, மக்களை அழித்து ஒழிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் அதிகாரத்தை கொடுப்பது என்பது எவ்வளவு ஆபத்தானது?

ஜனநாயக மாண்பு வாக்கு என்பது வலிமை மிக்க ஆயுதம். வாக்குக்கு காசு வாங்கி கொண்டு போடுகிற இந்த கேடு கெட்ட பணநாயக முறை.. ஒரு மாண்பு மிக்க ஜனநாயகத்தை கொன்றுவிட்டு கேடு கெட்ட பணநாயக முறையில் இந்த நாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பணம் இருப்பவன்தான் தேர்தலில் நிற்க முடியும், அரசியல் செய்ய முடியும் என்பது எவ்வளவு ஆபத்தானது?

பிரிவினைவாதம் தெலுங்கு தேசம் என்று தெலுங்கர்களுக்கு ஒரு கட்சி இருக்கிறது. ஆனால் நாங்கள் தமிழ் தேசியம் என்றால் அது பாசிசம்.. பிரிவினைவாதமா? நாங்க பிறக்கறதுக்கு முன்னாடியே அன்னைக்கு என்டி ராமராவ் தெலுங்கு தேசம்னு கட்சி ஆரம்பிச்சாரே.. அதை ஏன் யாரும் எதிர்க்கலை? அவங்க கூட ஏன் நீங்க கூட்டணி வைச்சீங்க?

தமிழர்கள் இப்பவும்தான் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி வைத்திருக்கிறார். ஆனால் எங்களை மட்டும் ஏன் இந்த திராவிட கட்சிகள் விமர்சிக்கிறார்கள்? சந்திரபாபு நாயுடுவை மட்டும் கொஞ்சி குலாவுவது ஏன்? அதனால நான் என்ன சொல்றேன், தெலுங்கர்களை தெலுங்கர்கள் ஆளட்டும், தமிழர்களை தமிழர்கள் ஆளுவோம். இந்தியாவை யார் ஆள்வது என்று வரும்போது எல்லாரும் ஒன்று கூடிப்பேசி ஆளுவோம்.

நாங்க ஆள கூடாதா? ஆந்திரா நரசிம்மராவ் ஆண்டுவிட்டார், தேவகவுடா பிரதமரா இருந்திருட்டார். ஆனா மலையாளிக்கு வாய்ப்பில்லை, நமக்கும் வாய்ப்பில்லை. வேணும்னா மலையாளிங்க 5 வருஷம் இந்த நாட்டை ஆளட்டும், நாங்கள் காத்திருக்கிறோம், இல்லைன்னா, நாங்க 5 வருஷம் ஆளறோம், அவங்க காத்திருக்கட்டும். ஒன்றுக்கும் உதவாத இந்த ரப்பர் ஸ்டாம்பு, சொல்ற இடத்துல கையெழுத்து போடுகிற இந்த குடியரசு தலைமை வகை மட்டும் கொடுத்து கொடுத்து எங்களை ஏமாத்தாதீங்க.

அப்பத்தா ஊறுகாய் அது ஏன் ராகுல் காந்தி, மோடியும் தான் நாட்டை ஆளணுமா? மம்தா பானர்ஜி ஆளக்கூடாதா? இங்க பாருங்க.. நம்ம அப்பத்தா ஓலை குடிசையில உட்கார்ந்து மட்டையில ஊறுகாய் வெச்சு விக்குது பாருங்க.. அதுக்கு வரி போட்டிருக்கான். ஆனா அதானி உடைய மின்சாரத்துக்கு வரி இல்லை, அம்பானி உடைய பெட்ரோலுக்கு வரி இல்லை” என்றார் ஆவேசமாக.