ஆவா குழுவினருடன் நேரில் விவாதிக்க அழைப்புவித்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், எந்வொரு பாதுகாப்பு உத்தியோகத்தரின் பாதுகாப்புமின்றி எந்த இடத்துக்கு வந்தும் தான் தயார் என்று தெரிவித்துள்ளார்.

கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி (Station Master) நேற்றுமுன்தினம் இரவு வன்முறைக் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டார். தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த ரயில் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“வடக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு செயற்படும் ஆவா குழு, வன்முறை மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் குழுவுடன் ஜனநாயக ரீதியில் கலந்துரையாடி பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாராகவிருக்கின்றேன்.

நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு சமூகத்திற்கும் எதிராக ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்க முடியாது.

எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்து வைப்பதற்கான சிறந்த வழி, ஜனநாயகமான முறையில் கலந்துரையாடுவதாகும். அந்த வழிமுறையில் இவ்வாறான குழுக்களுடன் பேச்சு நடத்த எந்த நேரத்திலும் நான் தயாராகவுள்ளேன்.

எனவே ஆவா குழுவுடன் நேரடியாகப் பேச்சு நடத்தி அதன் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும் தீர்வு காண்பதற்கு நான் தயாராகவுள்ளேன்” என்று ஆளுநரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.