அப்பிள் நிறுவனம் ஐபோன் 7 மொடலை 2016 ஒக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றிருக்கும் நிலையில், இந்த மொடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய அப்பிள் முடிவு செய்துள்ளது.

“மேட் இன் இந்தியா” திட்டத்தின் அங்கமாக அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 7 மொடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது. ஐபோன் 7 மொடல் பெங்களூரில் அமைந்திருக்கும் விஸ்ட்ரன் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

தாய்வானை சேர்ந்த விஸ்ட்ரன் நிறுவனம் அப்பிள் நிறுவனத்தி்ற்கு ஒப்பந்த முறையில் ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. போன்ற மொடல்களை ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. இதே ஆலையில், ஐபோன் 7 மொடலின் உற்பத்தி மார்ச் மாதத்தில் துவங்கியது.

இந்தியாவில் ஐபோன் 7 உற்பத்தி துவங்கியிருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்படும் வாய்ப்புகள் குறைவு தான் என கூறப்படுகிறது. முன்னதாக விஸ்ட்ரன் நிறுவன உற்பத்தி திறனை அதிகப்படுத்த ரூ.5000 கோடி (இந்திய ரூபா) முதலீடு செய்ய அனுமதி பெற்றிருந்தது.

இந்திய உற்பத்தி மூலம் கிடைக்கும் தொகையை அப்பிள் நிறுவனம் விளம்பரம் மற்றும் விற்பனையில் முதலீடு செய்யலாம் என ஆப்பிள் வல்லுநர்கள் சார்பில் வெளியாகும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்சமயம் ஐபோன் 7 (32 ஜி.பி.) மொடல் ரூ.39,990 மற்றும் ஐபோன் 7 (128 ஜி.பி.) மொடல் ரூ.49,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.