‘இந்திய கிரிக்கெட் அணி விராட்கோக்லியை மட்டுமே நம்பி இல்லை’ என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

உலக கிணணப்போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு தொடர்பாகத் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளவை வருமாறு,

அணி தேர்வில் நான் தலையிடுவது கிடையாது. அணி தேர்வு தொடர்பாக ஏதாவது ஆலோசனை இருந்தால் கப்டன் மூலம் தெரிவிப்பேன். உலக கிண்ணப் போட்டிக்கு 15 வீரர்களை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும் என்பதால் ஒரு சில வீரர்கள் தவிர்க்க முடியாமல் விடுபட்டு போவார்கள். இது முற்றிலும் எதிர்பாராததாகும். நான் 16 வீரர்கள் வேண்டும் என்றேன். இந்த போட்டி நீண்ட காலம் கொண்டது என்பதால் 16 வீரர்கள் இருந்தால் சவுகரியமாக இருக்கும் என்று நாங்கள் சர்வதேச கிரிக்கெட் சபைக்குத் (ஐ.சி.சி.) தெரிவித்து இருந்தோம். ஆனால் ஐ.சி.சி. 15 வீரர்களுக்கு தான் அனுமதி அளித்தது.

அணிக்கு தேர்வாகாத வீரர்கள் மனவேதனை அடையக்கூடாது. இது ஒரு வேடிக்கையான விளையாட்டாகும். வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் வாய்ப்பை இழந்த வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் அணிக்கு அழைக்கப்படலாம். பேட்டிங்கில் 4ஆவது வீரர் வரிசையில் எப்பொழுதும் குறிப்பிட்ட வீரரை மட்டுமே இறக்கிக் கொண்டிருக்க முடியாது. அது அவ்வப்போது மாறுதலுக்குரிய இடமாக இருக்கும்.

இந்திய அணி கப்டன் விராட்கோக்லியின் ஆட்டத்தையே அதிகம் நம்பி இருக்கிறது என்று கேட்கிறீர்கள்?. கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணியின் செயற்;பாடுகளைப் பார்த்தால் எல்லா வடிவிலான ஆட்டத்திலும் இந்திய அணி ‘முதல்;-3’ இடத்துக்குளேயே இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி ஒரு குறிப்பிட்ட (விராட்கோக்லி) வீரரையே நம்பி இல்லை என்பது உங்களுக்கு புரியும். இப்படி நிலையான வெற்றிகளை அணி பெறுவதற்கு பல வீரர்கள் எல்லா நேரங்களிலும் சீராக விளையாட வேண்டியது அவசியமானதாகும். நிலையான வெற்றியின் ஒட்டு மொத்த பெருமையும் அணியைத்தான் சாரும். என்று தெரிவித்துள்ளார்.