இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலை தீவிரமடையக் கூடாது என்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நிலைமைகளை சிறிலங்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் சாஹிட் அகமட் ஹஸ்மத் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து,  புல்வாமா தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

“இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நிலைமைகளை சிறிலங்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றநிலை மோசமடையக் கூடாது.

இரண்டு நாடுகளும் எல்லா பிரச்சினைகளையும் அர்த்தமுள்ள பேச்சுக்களின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் மூலமே, பிராந்தியத்தில் அமைதி மற்றும் உறுதிப்பாட்டை ஊக்குவிக்க முடியும்.” என்றும் தெரிவித்துள்ளார்.