எமது கைகள் இருந்தும் வேலைப்பளு காரணமாக இன்னும் இரண்டு கைகள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசிக்கின்றோம். ஆனால் தனது சொந்த அன்றாடத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இரு கைகளுமல்லாத மனிதர்களைப்பற்றி நாம் சிந்தித்ததுண்டா?

கிளிநொச்சி உதயநகரைச் சேர்ந்தவர் 43 வயதையுடைய கருணாரத்தினம் கருணாகரன். இவர் யுத்தத்தால் தனது இரு கைகளையும் இழந்த நிலையில்கூட அனைத்து வேலைகளையும் சாதாரணமாக செய்துகொண்டு மனம் தளராது தனது மனைவி மக்களுடன் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றார்.

கைகள் இழந்த தருணம்
‘நான் 1992ஆம் ஆண்டு யுத்தத்தில் எனது இரு கைகளையும் இழந்தேன்.கண்ணிலும் சிறு பாதிப்பு ஏற்பட்டது.ஆரம்பத்தில் வலியும் வேதனையும் அத்தோடு இனி எவ்வாறு வாழப்போகின்றோம் என்ற பயமும் இருந்தது. ஆனாலும் ஓர் இடத்தில் முடங்கி கிடக்க முடியவில்லை. எனது வேலையை நானே மெல்லமெல்ல செய்து பழகினேன். கடமையுணர்வு வந்ததால் சிறு சிறுதொழில்களைச் செய்ய பழகிக்கொண்டேன். பின்னர் வீட்டோடு கடை நடத்தி வந்தேன்.

தடுமாற்றம்
இங்குதான் நான் தடுமாறநேர்ந்தது. பொருட்கள்வேண்ட வருவோரிற்கு தாமதிக்காது அவற்றை வழங்க வேண்டும் ஆனாலும் பொலித்தீன் பைகளில் அரிசி மா போன்ற பொருட்களை இட்டுக்கொடுப்பதில் சற்று சிரமப்பட்டேன். இருந்தபோதும் பின்னர் சாதாரணமாக அவைகளை செய்யக்கற்றுக்கொண்டேன்.

திருமணம்
பத்தொன்பதாவது வயதில் திருமணம் முடித்தேன். எனக்கு கைகள் இல்லை என்று தெரிந்தும் என் மனைவி என்னைத் திருமணம் செய்து கொண்டார். எனது குறையை பொருட்டாக நினைக்காத மனைவி எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார்.

பரந்தனில் சொந்தமாக கடை வாங்கி அதை வாடகைக்கு விட்டிருக்கின்றேன்.அதன் குத்தகைக்காலம் முடிந்ததும் எனது தம்பியோடு சேர்ந்து கடையை நடத்த யோசித்திருக்கின்றேன். எனது சம்பளமும் கடையில் இருந்து வரும் வாடகைப்பணமும் வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்கின்றது.

வேலை முடிந்து வந்ததும் பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து கூட்டி வருவேன். எனது வீட்டிலுள்ள பூங்கன்றுகளுக்கு நீர் இறைப்பது மற்றும் இதர வேலைகளைச்செய்கின்றேன். வீட்டில் பயிர்கள் பூங்கன்றுகள் வளர்ப்பது மனதுக்கு சற்று ஆறுதல் அளிக்கின்றது.

செயற்கை கைகள்
செயற்கைக் கைகளை வலுவிழந்தோர் சங்கத்தில் சென்று பொருத்திக்கொண்டேன். ஆனாலும் அது பழக்கமில்லாத காரணத்தாலும் அதன் மூலம் தொட்டு உணரக்கூடிய தன்மை இல்லாததாலும். பேந்தில் பயணிக்கும்போது சிலவேளைகளில் நிலை தடுமாறிய சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே எனக்கு செயற்கைக் கைகள் பிரயோசனம் இல்லாத காரணத்தால் பின்னர் அதனை அகற்றிவிட்டேன்.

இருந்தாலும் இந்நிலையில் கூட சைக்கிள், மோட்டர் சைக்கிள், ஆட்டோ, ரக்டர் போன்ற வாகனங்களை ஓட்டுவேன். ஆனால் பிரதான வீதிகளில் வாகனங்களை ஓட்டும்போது பொலிசார் கண்டித்திருக்கின்றார்கள். ஆனாலும் வான் போன்ற பெரிய வாகனங்களை ஓட்டும் ஆசையும் இருக்கு. சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்றேன்.

கருணாகரனின் இலட்சியம்
இப்போது இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒருவர் 5 ஆம் வகுப்பு மற்றவர் 9 ஆம் வகுப்பு. அவர்களது கல்வி முன்னேற்றங்கள் திருப்தியளிக்கின்றது. எனது இரு பிள்ளைகளையும் படிக்கவைத்து பெரியவர்களாக ஆக்குவதே என் கனவு.’

இவ்வாறு தன் மனவுறுதியை வெளிப்படுத்துகிறார் கருணாகரன்.

எம்முன்னால் நடக்கும் அக்கிரமங்களையும் வன்செயல்களைக்கூட தடுக்க வழியில்லாமல் கைகளிருந்தும் கையற்றவர்களாகவே ஆகின்றோம். ஆனால் அங்கமிழந்தவர் ஒருவரைக்கண்டால் மட்டும் அவரை ஊனமுற்றோர் என்பதும் பரிகாசம் செய்வது வழக்கமாகின்றது எமக்கு.

ஊனம் ஒரு குறையில்லை என்று வாழும் விஷேட திறமையுடைய கருணாகரன் போன்றவர்களை மாற்றுத்திறனாளிகள் என்பதில் தப்பில்லை என்பதுடன் அவரைப்பார்த்து நாம் வாழப்பழகிக்கொள்ளவும் வேண்டும்.

 

– உத்தமன் –