இலங்கைப் படைகளுக்கு பெருத்த அவமானம் – பொன்சேகா

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கும், முன்னாள் விமானப்படைத் தளபதி றொஷான் குணதிலகவுக்கும் அளிக்கப்பட்டுள்ள உயர் பதவிகள் பாதுகாப்பு படையினருக்கு அவமானம் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

‘வசந்த கரன்னகொடவுக்கு அட்மிரல் ஒவ் தி பிளீட் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. குறைந்தது ஒன்பது நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான கப்பல்களுக்கு கட்டளையிடும் அதிகாரிக்கு மட்டுமே வெளிநாடு நாடுகள் இத்தகைய பதவியை வழங்குகின்றன.

கடற்படையில் மூன்று ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களும், வேறு சில படகுகளுமே உள்ளன. எனவே மூத்த அதிகாரிகளுக்கு இதுபோன்ற பதவிகளை வழங்குவது படையினருக்கே அவமானம்.

ஜனாதிபதியையும், இந்தப் பதவிகளைப் பெற்றவர்களையும் விமர்சிக்கவில்லை. ஆனால் அது படைகளுக்கு அவமானம் என்று மட்டுமே கூறுகிறேன், ‘என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம் வசந்த கரன்னகொட, அட்மிரல் ஒவ் தி பிளீட் ஆகவும், றொஷான் குணதிலகவுக்கும் மார்ஷல் ஒவ் தி எயர்போர்ஸ் ஆகவும் ஜனாதிபதியால் பதவி உயர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.