சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியா வரவேற்றுள்ளது. சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க 52 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று நியமிக்கப்பட்டதை அடுத்து, இந்திய வெளிவிவகார அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசியல் மாற்றங்கள் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பியுள்ள கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார், சிறிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்தியாவின் நெருங்கிய அயல் நாடு மற்றும் உண்மையான நண்பனாக, சிறிலங்கா அரசியல் நிலைமை பற்றிய தீர்மானத்தை இந்தியா வரவேற்கிறது.

இது அனைத்து அரசியல் சக்திகளாலும் நிரூபிக்கப்பட்ட முதிர்ச்சியையும்,  சிறிலங்காவின் ஜனநாயகம் மற்றும் அதன் நிறுவனங்களின் மீள் எழுச்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

சிறிலங்காவில் மக்கள் நலன் சார் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறது.

இந்த மாற்றத்தின் மூலம், இந்திய- சிறிலங்கா உறவுகள் ஒரு முன்னோக்கிய பாதையில்  தொடர்ந்து செல்லும்  என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.