இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த 10 வருடங்களில் பாரிய வளர்ச்சி பாதையை எட்டியிருந்தது.

யுத்தம் நிறைவடைந்த அமைதியான சூழ்நிலை நிலவும் பின்னணியில், தெற்காசியாவில் சுற்றுலாத்துறையின் இலங்கை பாரிய மைல் கல்லை எட்டியிருந்தமை யாவரும் அறிந்த உண்மை.

கடந்த 10 வருடங்களில் 2018ஆம் ஆண்டு இலங்கையை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்ததாக யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 2,333,796 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அது 10.3 வீத சுற்றுலாத்துறை வளர்ச்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தே பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருகைத் தந்துள்ளனர்.

அத்துடன், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி வருகைத் தந்திருந்தனர்.

இவ்வாறு சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சியை அடைந்து வந்த இலங்கை தற்போது மீண்டும் வீழ்ச்சி பாதையை நோக்கி சென்றுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகளில் பயணத் தடையை விதித்திருந்தது.

உலக நாடுகளில் பயணத் தடையை விதித்திருந்த பின்னணியில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளவிருந்த பலர், தமது பயணங்களை ரத்து செய்திருந்த நிலையில், இலங்கைக்கு வருகைதத் தரும் சுற்றுலாப் பயணிகளின் வீதம் பூச்சியம் என்ற நிலைக்கு வீழ்ச்சி கண்டிருந்தது.

இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் பல நாடுகள் பயணத் தடையை தளர்த்தியுள்ள போதிலும், அவதானத்துடன் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அறிவித்திருந்தன.

இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி மீண்டும் வர ஆரம்பித்துள்ள நிலையில், அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சியாகவே இன்றும் காணப்படுகின்றது.

சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்டே இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் உள்ளதால் அது தற்போது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கூறுகின்றனர்.

சிறு வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்பார்த்து மீண்டும் காத்திருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்து காணப்படுவதாக காலி – உனவட்டுன பகுதி ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

‘ஏப்ரல் 21ஆம் தேதி தாக்குதலின் பின்னர் உனவட்டுன பகுதியில் சுற்றுலாத்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏனைய நாட்களில் இந்த பகுதிக்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். ஆனால் இன்று எந்தவொரு சுற்றுலா பயணியையும் காண முடியவில்லை. வெளிநாட்டவர்களுக்கு இடையில் அச்ச நிலைமை தொடர்வதே இதற்கான காரணமாக இருக்கின்றது. எதிர்வரும் நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம். சுற்றுலாத்துறை தற்போது பாரிய வீழ்ச்சியை காட்டுகின்றது. இது மிகுந்த மனவேதனைக்குரிய விடயமாகும். நிலைமை வழமைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்’ என்றார் அவர்.

உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை மாத்திரமே நம்பி தங்களின் வாழ்வாதாரம் இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்திருந்த போதிலும், தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக முன்னேறி வருவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையயை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

கடந்த ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலான அமைச்சரவை பத்திரமொன்றையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்பித்துள்ளார்.

இலங்கைக்கு சேவையை வழங்கும் விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்கான கட்டண குறைப்பை குறைக்கும் வகையில் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னை விமானநிலையத்தில் விமான எரிபொருள் விலைக்கு சமமான வகையில் விமான எரிபொருளின் விலையை குறைக்குமாறு இலங்கை கனியவள பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஆலோசனை வழங்குதலும் இந்த அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமரினால் சமர்பிக்கப்பட்ட இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.