இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸில் எட்டு கழுகுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்த பகுதியிலுள்ள மொத்த கழுகுகளின் எண்ணிக்கையில் பாதி என்றும் தெரியவந்துள்ளது.

கிரிஃபான் எனும் வகையை சேர்ந்த இந்த கழுகுகள், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன என இஸ்ரேலின் இயற்கை மற்றும் பூங்காக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

எந்த விதமான விஷம் கொடுத்து, எப்படி கழுகுகள் கொல்லப்பட்டன என்பது குறித்தும், இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் எல்லையோர பகுதிகளில் கடுமையாக வீழ்ச்சியடைந்து வரும் கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், விஷம் கொடுக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த மேலும் இரண்டு கழுகுகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.