நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு குறித்து இந்த வழக்கில் முன்னிலையான சட்டவாளர்கள ஊடகவியலாளர்கள் அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சியும வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

 

‘ஒரு மனதாக அளிக்கப்பட்ட தீர்ப்பையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த தீர்ப்பை மதித்து அதன்படி செயற்படுவார்கள் என்று நம்புகிறோம்’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டவாளர் கனகஈஸ்வரன் தெரிவித்தார்.

 

‘உயர் நீதிமன்றம் குறுகிய நாள்களில் விசாரித்து இந்த வரலாற்றுத் தீர்ப்பை ஒருமனதாக அறிவித்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றில் அளிக்கப்பட்ட மிக முக்கியமான தீர்ப்பு’                                                                           -ஜனாதிபதி சட்டவாளர்எம்.ஏ.சுமந்திரன் –

 

 

”அரசியலமைப்புக்கு எதிரான சர்வாதிகாரத்துக்கு கொடுக்கப்பட்ட பெரும் அடி  இது ”                                                                                                                  -இந்தியாவின் ஆங்கில நாளிதழான தி இந்துவின் ஆசிரியர் என்.ராம் –

 

 

 

‘எமது நாடு இன்னமும் நம்பிக்கையின் நிலமாக இருக்கிறது என்பதை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு காட்டுகிறது. ஒரு சுதந்திரமான நீதித்துறை ஒரு நாட்டுக்கு எதைச் செய்யலாம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது’                                                                                                                – காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டவாளர் சாலிய பீரிஸ்-

 

‘இந்நாட்டின அரசியலமைப்பை மீறி செயற்பட எவருக்கும் அதிகாரமில்லை என்பதை இந்த தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாத்த நீதித்துறைக்கு வாழ்த்துக்கள். இந்தத் தீர்ப்பானது சிறுபான்மையினருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்’   – நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீன் – 

 

உச்சநீதிமன்றத்தின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடும் நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருப்போம். ஏனெனநாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படாமல், உண்மையான நீதி மக்களுக்கு கிடைக்காது.           – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச-

 

சிறிலங்கா அதிபர் நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக மதித்துச் செயற்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம். நாடாளுமன்றம், நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் என்பன ஜனநாயகத்தின் தூண்களாகும்.நாட்டு மக்களின் இறைமையை உறுதிப்படுத்துவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.                                                                             -ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க-

ஜனநாயகம் உறுதியானது, அரசியலமைப்பு பலமானது, இந்த வெற்றியை நாங்கள் அமைதியாக கொண்டாட வேண்டும். உச்சநீதிமன்றின் தீர்ப்புக்கு சிறிலங்கா அதிபர் மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தேவையற்ற ஆலோசனைகளை கேட்டு இனிமேலும் செயற்படாது, நாட்டை பற்றி அவர்  நினைக்க வேண்டும்.                                                                                                                                                                                                -ஐ.தே.க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச

முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க முடிவு. ஆனால், இந்த தீர்ப்பினால் பிரச்சினையை தீர்க்க முடியாது. மகிந்த ராஜபக்சவை பிரதமராகச் செயற்படத் தடைவிதித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை இடைநிறுத்தி நாளை மற்றொரு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கூடும். பேச்சுக்கள் மூலமான தீர்வு காத்திருக்கிறது.                                                                                                                     -அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர் அலன் கீனன்