இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக கொழும்பு வந்துள்ள இந்திய பாதுகாப்புச் செயலர் சஞ்சய் மித்ரா இன்று இலங்கை அரச மற்றும் பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் இந்திய பாதுகாப்புச் செயலர் சஞ்சய் மித்ரா கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன், இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஆறு பேரும் கொழும்பு வந்துள்ளனர்.

ஆண்டு தோறும் நடத்தப்படும் இருநாடுகளின் பாதுகாப்பு செயலர் மட்டத்திலான பாதுகாப்புக் கலந்துரையாடலில் பங்கேற்கும் சஞ்சய் மித்ரா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் இலங்கையின் ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், டிசெம்பர் மாதம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் முதலாவது உயர்மட்ட இந்திய அதிகாரி இவரே என்பது குறிப்பிடத்தக்கது.