உயிர்க் கொல்லிக் கம்பங்களை அகற்றுங்கள் – ஸ்மாட் போலுக்கு எதிராக ஐந்து சந்தியில் போராட்டம்

யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் மாநகர சபையின் அனுமதியுடன் அமைக்கப்படும் ஸ்மாட் லாம்ப் போல் கம்பங்களை அகற்றுமாறு கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் இன்று காலை கவனயீா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5ஜி அலைக்கற்றையுடன் ஸ்மாட் லாம்ப் போல் கம்பங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லையில் மக்கள் போராட்டங்கள் நடாத்தப்படும் நிலையில் இன்று காலை 9ணிக்கு ஐந்துசந்தி பகுதியில் ஒன்றுதிரண்ட முஸ்லிம் மக்கள், “உயிர்க் கொல்லி” கம்பங்கள் வேண்டாம் எனகோரி கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

“மின் விளக்குகளை பொருத்துவதற்காகவே கம்பங்களை நாட்டுவதாக பொய்கூறிய யாழ்ப்பாணம் மாநகர சபை கதிர்வீச்சுடன் கூடிய 5ஜி தொழிநுட்ப கம்பங்களை நாட்டுகின்றது.

மக்களை கொல்லும் கம்பங்கள் எமக்கு தேவையில்லை. அதனை அகற்றுங்கள்” என்று கோரிக்கையை முன்வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மாநகர சபைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், பதாகைகளையும் தங்கியிருந்தனா்.