உலகக் கிண்ணத்தை வென்றிராத இரு அணிகள் இறுதியில் ; வெல்லப் போவது போவது யார்?

உலகககிண்ணக் கிரிக்கெட்டில் நாளை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான உலகககிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன.

லீக் சுற்றின் முடிவில் இந்தியா,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி, நான்காவது இடத்தில் இருந்த நியூசிலாந்தை முதல் அரையிறுதி போட்டியில் எதிர் கொண்டது. அதில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்த நிலையில், இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் உலகககிண்ண இறுதிப் போட்டி லண்டனின் லோர்ட்ஸ் மைதானத்தில் நாளை மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

இங்கிலாந்தை பொருத்தவரை தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜோனி பேர்ஸ்டோவ் அதிரடியான ஆட்டத்தின் மூலம் எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்து வருகின்றனர். கேப்டன் மோர்கன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித் போன்றவர்கள் எதிரணி வீரர்களின் விக்கெட்டுகளை சரியான சமயத்தில் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுக்கின்றனர். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நியூசிலாந்தை பொறுத்தவரை அந்த அணியின் தொடக்க வீரர்களான மார்ட்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிகோல்ஸ் இதுவரை தங்களது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிபடுத்தவே இல்லை. ஒருவேளை இறுதி போட்டியில் இரு வீரர்களும் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர்களை கட்டுப்படுத்துவது இயலாத காரியம். நியூசிலாந்து அணி கேப்டன் உலகக்கிண்ண தொடர் முழுவதும் அணியை தலைமை தாங்கி வழிநடத்துவதிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு உறுதுணையாக ராஸ் டெய்லர் மற்றும் ஜேம்ஸ் நீஷம் போன்ற வீரர்கள் தங்கள் பங்கினை நேர்த்தியாக செய்து வருகிறார்கள். பந்து வீச்சில் அந்த அணியின் பேர்குசன், டிரெண்ட் போல்ட் மற்றும் மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்வார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

சமபலம் வாய்ந்த இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் மோதுவதால் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றும் என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ஜேசன் ராய், பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், மோர்கன் (கப்டன்), பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், கலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், பெர்குசன், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட்.