ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர்  கலாநிதி தயான் ஜெயதிலகவின் செயற்பாடுகள் தொடர்பாக, உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் அண்மைய கூட்டத்தில் கரிசனை எழுப்பப்பட்டதாக, ஜே.வி.பி . நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று, இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குமறைகள் குறித்த விவாதத்தில், உரையாற்றிய அவர்,

“ஒரு தூதுவராக தயான் ஜெயதிலகவின் செயற்பாடுகள் கேள்விக்குரியது. தயான் ஜெயதிலக  சரியான கல்வித் தகைமையைக் கொண்டிருக்கலாம்.

ஆனால், அவரது செயற்பாடுகள் ஒரு அரசியல் விஞ்ஞானி என்பதை விட, அரசியல் பரப்புரையாளர் என்பதாகவே உள்ளது. அவரது நடத்தைகள் அதனை தெளிவான புலப்படுத்தியுள்ளன.

உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவில் இவரது பெயர் முன்மொழியப்பட்ட போது, இவரைப் போன்ற ஒருவரை தூதுவராக நியமிப்பது சரியானதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

குழுவில் நடந்த நீண்ட விவாதங்களை அடுத்து,  ரஷ்யாவுக்கான தூதுவராக அவரது பெயரை அங்கீகரிக்க முன்னர், வெளிவிவகார அமைச்சுடன் இணங்கிச் செயற்பட வேண்டும் என்று தயான் ஜெயதிலகவுக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய, ஆலோசனை கூறியிருந்தார்.

இந்த ஆலோசனையை மீறி அவர், தனது அரசியல் பரப்புரையை இன்னமும் மேற்கொள்கிறார். ஒக்ரோபர் 26 அரசியல் சதிப்புரட்சிக்கு இவர் ஆதரவு அளித்தார். ஒரு இராஜதந்திரி அவ்வாறு செயற்பட முடியாது.

இது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல். உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு இதுகுறித்து அண்மைய கூட்டத்தில் கலந்துரையாடியது,

இப்போது,  தயான் ஜெயதிலக உடன்பாட்டுக்கு அமைய  செயற்படுகிறாரா என்பதைக் கண்டறிய வெளிவிவகார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும். அதுபற்றி  நாடாளுமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.