ஏப்ரல் தொடக்கம் வடக்கு நீதிமன்றங்களில் கைவிரல் ரேகை பதிவு இயந்திரம் – நீதி அமைச்சு நடவடிக்கை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஊழியர்களின் வருகை மற்றும் மீள்செல்கை தொடர்பான கைவிரல் பதிவு இயந்திரத்தை ஏப்ரல் முற்பகுதியில் பொருத்துமாறு நீதி அமைச்சால் வழங்கல் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கைவிரல் பதிவு இயந்திரங்கள் வரும் ஏப்ரல் முதல் வாரம் பொருத்தப்பட்டு, பரீட்சாத்த பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சிலோன் பிஸ்னஸ் அப்பிலிக்கன்ஸ் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் வரவு மற்றும் மீள்செல்கை கைவிரல் ரேகைப் பதிவு இயந்திரம் ஏப்ரல் மாதம் முழுவதும் பரீட்சாத்தமாக பதிவு செய்யப்பட்டு மே முதலாம் திகதி தொடக்கம் உத்தியோகபூர்வமாக இயங்கவைக்கப்படும் என்றும் அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணம் உள்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள நீதிமன்றங்களில் கைவிரல் ரேகைப் பதிவு இயந்திரம் பொருத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.