இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி இன்று (10) மாலை சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் தயாரிப்பாளர்களின் பெயரை குறிப்பிட்டு கவுரம் ஏற்படுத்த வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் ரஹ்மானுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தங்களின் இசை நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு திரைப்படம் உருவாக காரணமானவர்கள் தயாரிப்பாளர்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

எப்.எம் ரேடியோக்களில் பாடல்களை ஒளிபரப்பும் முன் அந்த பாடல் இடம் பெற்ற படத்தை தயாரித்த நிறுவனத்தின் பெயரையோ, தயாரிப்பாளர் பெயரையோ குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அவர்களும் அதனை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். செயல்படுத்தவும் தொடங்கி விட்டார்கள்.

இதனை கருத்தில் கொண்டு தங்களது இசை நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாடலையும் பாடுவதற்கு முன்பாக அந்த பாடல் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர் பெயரை கூறிவிட்டு பாடலை பாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

அதனை இந்த நிகழ்ச்சி முலம் அமுல்படுத்தி இதற்கு தாங்கள் ஒரு முன்னுதராணமாக திகழ வேண்டும். இதன் மூலம் இனிவரும் காலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் தயாரிப்பாளர்களுக்கு அங்கீகாரமும், அடையாளமும் கிடைக்கும் என்பதால் தாழ்மையுடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.