கச்சாயில் தொலைந்து போகும் தும்புக் கைத்தொழில் பாரம்பரியம்

மா. தவரத்தினபூபதி

நம்மில் எத்தனை பேர் நம் உள்ளுர் உற்பத்திப் பொருள்களை வாங்குவதற்கு இன்று தயாராக இருக்கின்றோம் என்று கேட்டால் பெரும்பாலான பதில் ‘இல்லை’ என்று தான் கூறுவார்கள்.

ஏன் அதை வாங்க நாம் தயக்கம் காட்டுகின்றோம்? என்றால் சரியான காரணம் உங்களில் எத்தனை பேரால் கூறமுடியும்.

உள்ளுர் (லோக்கல்) பொருட்கள் தரம் குறைந்தவை என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று இருப்பதே காரணம் ஆகும். ஏன் என்றால் குண்டூசி முதல் குதிரை வரை வெளிநாட்டுப் பொருள்களும் வெளிமாவட்டப் பொருள்களும் மட்டுமே தரமானவையாகத் தெரிகின்றன. அது தரமானதோ? இல்லையோ? அதனை வாங்கத்தான் ஆர்வம் காட்டுகின்றோம்.

பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர் கூறும் போது,

யாழ்ப்பாணத்தில் 2009 உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததது. அதுவரை அத்தியாவசியப் பொருள்களுக்கே ஆளாய் பறந்த யாழ்ப்பாணத்திற்கு தேவையான தேவையற்ற பொருள்கள் வந்து குவியத் தொடங்கியன. அதனால் பழையதையெல்லாம் தொலைத்துக் கொண்டு இருக்கின்றோம். இதனால் தெரிந்தோ தெரியாமலோ கூட அதன் தாக்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாழ்ப்பாணத்தைப் பாதித்திருக்கிறது. நம்மால் தான் இந்தப் பாதிப்பு என்று அறியாமல் மற்றவர்கள் மீது பழி சுமத்திக் கொண்டு இருக்கின்றோம். என்று கூறுகின்றார்.

இவ்வாறான ஒரு நேர் கோட்டில் பாதிக்கப்பட்டதான் தென்மராட்சியின் கச்சாய் தெற்குப் பிரதேசம். ஒரு காலத்தில் இவ் ஊர் மக்களின் தும்புக் கைத்தொழிலுக்கு வட பகுதியில் நல்ல கிராக்கி இருந்தது. 1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இங்கு தும்புக் கைத்தொழில் தனித்தன்மையுடன் பிரபலமடைந்திருந்தது. என்று கூறுகின்றார். அங்கு நீண்ட காலமாக இக்கைத்தொழிலைச் செய்து வரும் மா. தவரத்தினபூபதி (70) எனும் பெண்மணி. இது தொடர்பாக அவர் மேலும் கூறும் போது,

கயிறு பின்னப்பயன்னபடுத்தும் பாரம்பரிய சக்கரம்

இங்கு எங்களின் தும்புக்கைத்தொழிலுக்கு அடிப்படையாக அமைந்தது கொழும்புத்துறை தான். எங்கள் உறவினர்கள் மூலமாக இத்தொழிலைக் கற்றுக் கொண்டோம். ஆரம்பத்தில் 6 குடும்பங்களுடன் மட்டுமே ஆரம்பித்த இத்தொழில் பின்னர் 150 குடும்பங்களாக வளர்ச்சியடைந்தது. அதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்த விடயம் உள்நாட்டு யுத்தம் தான்.

இக்காலத்தில் கடல் தொழிலை மட்டுமே நம்பியிருந்த இம்மக்களுக்கு கடல் தொழிலுக்கான அனுமதி குறைக்கப்பட்டது. இதனால் குடும்ப பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்பட்டது. இச்சிக்கலை நிவர்த்தி செய்யவே இத்தொழில் அவர்களுக்கு அடிப்படையாக அமைந்தது. பின் இத்தொழில் வளர்ச்சிபெறத் தொடங்கியதும், யாழ் மாவட்த்தில் உள்ள பல இடங்களிலிலும் இருந்து தேவைக்கான தும்பைபையும் கயிற்றையும் தேடி வந்து வாங்கத் தொடங்கி விட்டார்கள். அந்தளவிற்கு கச்சாய் தும்பு என்றாலே தனி மதிப்பு ஏற்பட்டிருந்தது.

ஊறவைத்த தும்புகளை கைகளால் அடித்துப்பிரித்தல்

ஆரம்பத்தில் அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய முறையில் தான் இடம்பெற்றுக்கொண்டு இருந்தது. அவர்களுக்குத் தேவையான மூலப்பொருளான பச்சைத் தேங்காய் மட்டை அவர்களின் ஊரிலேயே கிடைக்கிறது. எல்லோரும் இத்தொழிலை ஆரம்பிக்கத் தொடங்கியதும் மூலப்பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனை நிவர்த்தி செய்ய பணம் கொடுத்து மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அயல்கிராமங்கள் நகரங்களிலிருந்து மூலப்பொருள்களைப் பெற வேண்டிய நிலை இருந்ததனால் இதனைப் பெறுவதற்கான செலவும் தூரத்திற்கேற்ப அதிகரித்துக் கொண்டே சென்றது. அவ்வாறு பெற்றுக்கொண்டாலும் அவற்றை முடிவுப்பொருளாக மாற்ற முடியாத நிலை காணப்பட்டது. ஏனென்றால் அவற்றை ஒரு வருடத்திற்கு மேல் கடல் நீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் தான் தும்பு பிரித்தெடுக்கக்கூடிய முறையில் மாற்றமடையும். இதனால் மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் தொழிலைக் கைவிடத் தொடங்கினார்கள்.

இயந்திரப் பாவனை இல்லாத காரணத்தினால் பாரம்பரிய முறையிலேயே தும்பு பிரித்தெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது. பச்சைத் தேங்காய் மட்டையினை கடற்கரையில் பள்ளம் தோண்டி அதில் மட்டைகளை வருடக் கணக்கில் புதைத்து வைப்பார்கள். அதன் காலம் வந்ததும் ஊறிய மட்டைகளை வெளியில் எடுப்பார்கள். கடற்கரைப் பிரதேசம் சதுப்பு நிலமாகக் காணப்படுவதால் ஈரத்துடன் சுமந்தே செல்ல வேண்டும்.

பின்னர் அதனைத் தடிகளால் அடித்து அவற்றைத் தும்பாக மாற்ற வேண்டிய நிலை காணப்பட்டது. அதனால் உடல் ரீதியான அசௌகரியங்களினையும எதிர்கொள்ள வேண்டிய நிலை அவர்களிற்கு ஏற்பட்டது.

இத்துடன் இயற்கை வளமான கடல் வளம் கூட இவர்களுக்குச் சாதகமாக அமையவில்லை.

65 வயதான வ. நாகேஸ்வரி (தும்புக் கைத்தொழில் செய்பவர்) இது பற்றிக் கூறும் போது இந்தக் கடலானது ஊமைக் கடல் என்று தான் கூறுவார்கள். ஏனென்றால் கடற்கரையில் எல்லாக் காலங்களிலும் தேங்காய் மட்டைகளை ஊற வைக்கவோ எடுக்கவோ முடிவதில்லை. தை – சித்திரை வரையான காலப்பகுதியிலும் ஆடி – ஆவணி வரையான காலப்பகுதியில் மட்டுமே இக்கடல்நீர் வற்றும். அவ்வாறு வற்றும் போதுதான். நீரில் தாட்ட மட்டைகளை எடுக்க முடியும். ஆனால் கொழும்புத்துறை, கோகிலாக்கண்டி ஆகிய இடங்களில் இக்கடல் நீர் வற்றுதல் அடிக்கடி இடம்பெறுவதால் தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ்வாறு தொடர்ந்து மூலப்பொருளைப் பெற முடியாது போனதால் தும்புக் கைத்தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை சரிவடையத் தொடங்கியது.

2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று தும்புக் கைத்தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் ஒன்றினை வகுத்தது. அதன் பயனாக கச்சாய் அம்மன் கோயிலுக்கு அருகாமையில் தும்புத் தொழிற்சாலை ஒன்றினை அமைத்தார்கள். ஆனால் இத்திட்டத்தின் மேல்; சில குற்றச்சாட்டு குரல்களே எழகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட அ. ரதில்லா, அ. சுலோச்சனா ஆகியோர் குறிப்பிடும் போது,

நாளொன்றுக்கு 200 – 400 ரூபா வரையான சம்பளம் கொடுக்கின்றோம் என அழைத்துச் சென்ற எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கே வேலைக்கூலியாக ஒருவேளை சாப்பாடும் அவர்கள் அன்று உற்பத்தி செய்த பொருள்களில் ஏதாவது ஒன்று மட்டுமே கூலியாக மிஞ்சியது. என்கின்றார்கள் அவர்கள்.

”பனையால் விழந்தவனை மாடு ஏறி மிதித்தது” போல் அது அமைந்தது. ஏற்கனவே பல்வேறு துன்பங்களின் மத்தியில் தொழில் செய்த அவர்கள் இவ் ஏமாற்றங்களால் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். பின்னர் அந்தத் தொழிற்சாலையும் மூடப்பட்டு விட வேலையற்றவர்கள் தம் தொழிலை மீண்டும் செய்ய முடியாமல் போய்விட்டது. இதனாலேயே இவ் உள்ளுர் கைத்தொழில் அழிந்து போய்க்கொண்டு இருக்கிறது.

இவ்வாறெல்லாம் நடந்து முடிந்ததன் பின்னரும் இன்றும் சில குடும்பங்கள் இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் . அவ்வாறு மேற்கொண்டு வந்தாலும் இவர்களின் கைத்தொழில் பொருள்களினை விற்பதற்கான தகுந்த சந்தை வாய்ப்புக்கள் கிடைப்பதும் இல்லை. அத்தோடு கயிறு திரிப்பதற்கான இயந்திரமானது ஆரம்பத்தில் ஆயிரத்து 500 ரூபாவாக இருந்தது. இப்போது 15ஆயிரம் ரூபாவாக இருக்கின்றது. ஆகையால் மீண்டும் அத்தொழிலை மேற்கொள்ள அதிக மூலதனம் தேவைப்படுகின்றது. ஆதலால் இதனை மேற்கொள்ளவும் புதிதாக ஆரம்பிப்பதற்கும் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இவ் அழிந்து செல்லும் இவ் உள்ளுர்க் கைத்தொழிலை மேலெழச் செய்ய வேண்டுமெனின் இவர்களுக்கான கடனுதவிகளை அரசாங்கம், தனியார் நிறுவனங்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். அத்தோடு இவர்களின் மூலப்பொருள்களைக் குறைந்த விலையில் பெறுவதற்கு வழிசமைப்பதோடு இவர்களின் தும்பு உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுப்பது தான் சிறந்த வழியாக அமையும். அப்போது தான் ஒடிந்து போய் இருக்கும் இம் மக்களையும் இக் கைத்தொழிலையும் மிளிரச் செய்ய முடியும். என்று தெரிவிக்கின்றனா.; இப் பாதிக்கப்பட்ட மக்கள்;.