கஞ்சா விருந்திற்கு முன்பதிவு : 7 பெண்கள் உட்பட 160 பேர் கைது!

இந்தியா ஈசி.ஆர். வீதியில் மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் நடைபெற்ற கஞ்சா விருந்தில் கலந்து கொண்ட 7 இளம்பெண்கள் உள்பட 160 ஐடி பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஈசி.ஆர். வீதியில் உள்ள விடுதியில் மது, கஞ்சா விருந்து நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த பெண் காவலர்கள் உட்பட சுமார் 100இற்கும் மேற்பட்ட பொலிஸார் அந்த இடத்தைச் சுற்றிவளைத்து சோதனை செய்தனர்.

இந்த சோதனையின்போது 7 பெண்கள் உள்பட 160 பேர் மது, கஞ்சா உள்பட பல்வேறு போதை பொருள்களைப் பயன்படுத்தியமை தெரிய வந்தது. மேலும் இவர்கள் அனைவரும் ஐடி பணியாளர்கள் என்றும் வார இறுதியை கழிக்க Online னில் முன்பதிவு செய்து ஓரிடத்தில் இணைந்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட 160 பேர்களையும் மாமல்லபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான கஞ்சா உள்பட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கைது செய்யப்பட்ட ஆண்கள், பெண்களுக்கு சொந்தமான உடைமைகள், கைப்பை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

வீக் எண்ட் பார்ட்டி என்ற பெயரில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் போதைக்கு அடிமையாகும் இளைஞர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.