கடந்த வருடத்தில் மட்டும் 64 புதிய மதுபானச்சாலைகளிற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் வெறும் 10 மதுபானச்சாலைகளிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வருட அனுமதிகள் 64 வீதத்தால் அதிகரித்துள்ளன.

2006ம் ஆண்டிலிருந்து கலால் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஆண்டுரீதியான அனுமதிகளில், இதுவே இரண்டாவது அதிகபட்ச அனுமதியாகும்.

2014இல் 84 மதுபானச்சாலைகளிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், நல்லாட்சியின் முக்கிய கோசங்களில் மதுபோதை ஒழிப்பும் ஒன்றாக இருந்ததால், 2015இன் பின் இது படிப்படியாக குறைந்தது.

2015இல் 52, 2016இல் 38, 2017இல் 10 அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.

கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கலால் திணைக்களத்தின் செயற்பாட்டு அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, சாராயத்தின் மீதான வரி அதிகரிப்பால் பியர் நுகர்வு அதிகரித்துள்ளதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சிகரெட் தயாரிப்பதற்காக வழங்கப்பட்ட ஒரு உரிமமும், பீடி, சுருட்டு மற்றும் குழாய் புகையிலைக்கு வழங்கப்பட்ட 521 உரிமங்களும் 2018 இல் புதுப்பிக்கப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட புகையிலை மீதான வரி 2017 உடன் ஒப்பிடும்போது 2018 இல் 30.9 சதவீதம் குறைந்துள்ளது என்று அறிக்கை மேலும் கூறுகிறது.