கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய சந்தேகத்துக்குரிய அமெரிக்க சரக்கு விமானம் நேற்றுக்காலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றுக்காலை இந்த விமானம் ஐக்கிய அரபு எமிரெட்சுக்கு புறப்பட்டு சென்றதாக, கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விமானம் சரக்குகள் எதையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறக்கவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, இந்த விமானம்ஆடைகளை கொண்டு செல்வதாகவும், அவற்றை அங்கு இறக்கிய பின்னர், அமெரிக்காவுக்குப் பயணிக்கும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், பஹ்ரெய்னுக்கு அருகிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருந்த போதும், எதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் வரை வந்தது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வெஸ்ரேன் குளோப் எயர்லைன் நிறுவனத்துக்குச் சொந்தமான, மக் டோனெல் டக்ளஸ் 11 ரக சரக்கு விமானம் நேற்று முன்தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது.

இந்த விமானத்தில், அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு அனுப்புவதற்காக விநியோகப் பொருள்கள் எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் கிளப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.