தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கலைஞர் கருணாநிதி (வயது-94) கடந்த சில நாள்களாக நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்தே, சிறப்பு மருத்துவக் குழுவினர், நவீன மருத்துவக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளித்து வந்தனர்.

கலைஞரின் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அறிந்து தமிழ்நாடு மற்றும், இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் அவரைப் பார்வையிடவும், நலம் விசாரிக்கவும், கோபாலபுரம் சென்று வந்தனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புதுடெல்லியில் இருந்து தொலைபேசி மூலம் நலம் விசாரித்தும் வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இரத்த அழுத்தம் குறைந்ததை அடுத்து இன்று அதிகாலை 12.30 மணியளவில், காவேரி மருத்துவமனைக்கு அவசரமாக அம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நள்ளிரவில் கலைஞர் கருணாநிதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தகவல் அறிந்த பெருமளவான தி.மு.கவினர் கோபாலபுரம் மற்றும் மருத்துவமனைப் பகுதியில் குழுமியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மு.க ஸ்டாலின், ஆ.ராசா உள்ளிட்ட தி.மு.கவின் முக்கிய தலைவர்களும், திருநாவுக்கரசர், திருமாவளவன், உள்ளிட்ட ஏனைய கட்சித் தலைவர்களும் காவேரி மருத்துவமனைக்கு விரைந்து சென்று நலன் விசாரித்தனர்.

அதேவேளை, கலைஞர் கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை அடுத்து, அவரது இரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வந்துள்ளது என காவேரி மருத்துவமனை இன்று அதிகாலை அறிவித்துள்ளது.

எனினும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.