எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹின் காலத்திலேயே காத்தான்குடி அரபிய அடையாளங்களை பெற்று, மாற்றமடைந்தது என தெரிவுக்குழுவின் முன்பாக சாட்சியமளித்துள்ளார் காத்தான்குடி மசூதிகள்கூட்டமைப்பு சார்பில் முன்னிலையான அபூசாலி உவைஸ்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக காத்தான்குடி மசூதிகள், மற்றும் நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் முன்னிலையான அபூசாலி உவைஸ் நேற்று சாட்சியமளிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

சாட்சியத்தின் பின்பாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளிற்கு பதிலளித்தபோது,

அரபுமொழி போஸ்டர்கள் காத்தான்குடியில் ஒட்டப்பட்டதும் ஹிஸ்புல்லாஹ் அதிகாரத்தில் இருந்தபோதுதான் என தெரிவித்துள்ளார்.

அராபிய அடையாளம் ஒரு கலாசார அடையாளம் அல்ல. அதை சவுதி அரேபியா ஏற்றுமதி செய்தது. ஆனால் மத தீவிரவாதத்திற்கும் அராபிய மயமாக்கலிற்கும் தொடர்பில்லை என்றார்.

காத்தான்குடியில் அரபிய மொழி அறிவித்தல்கள் இருப்பது பற்றி ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது, அப்படியான அறிவித்தல்கள் அவசியமில்லையென்றார். காத்தான்குடி வீதியில் பேரீச்சமரங்கள் நடப்பட்டது ஹிஸ்புல்லாஹின் காலத்தில்.

சஹ்ரான் 5ஆம் வகுப்பு வரைதான் படித்தவர். அவர் காத்தான்குடி அரபு கல்லூரி, குருநாகல் மதராசாவில் படித்தாலும், கற்கை நெறியை பூர்த்தி செய்யவில்லை.

சஹ்ரான் 2006இல் காத்தான்குடியில் அமைப்பை உருவாக்கினார். ஆரம்பத்தில் மத, சமூக வேலைகளில் ஈடுபட்டாலும், பின்னர் அவரது நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக மாறின. காத்தான்குடி மசூதிகளின் கூட்டமைப்பு ஆரம்பத்திலிருந்தே அவரை தடுக்க
நடவடிக்கைகள் எடுத்தது.

அவரது கூட்டங்களில் ஒலிவாங்கியை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என பொலிசாரிடம் தெரிவித்திருந்தோம்.

2016 அளவில் சஹ்ரானின் நடவடிக்கைகள் மோசமாகி விட்டன. ஹிஸ்புல்லா மண்டபத்தில், தான் ஐ.எஸ் ஆதரவாளர் என்பதை வெளிப்படையாக தெரிவித்தார்.

இலங்கை ஜமியாத்துல் உலாமா சபை ஏற்பாடு செய்த கூட்டமொன்றை சஹ்ரான் குழு குழப்பியது. ஏப்ரல் 21 தற்கொலைதாரிகள் இருவர் அதில் இருந்தனர். பாரம்பரிய முஸ்லிம்களிற்கும், சஹ்ரான் குழுவிற்குமிடையில் 2017.3.10இல் மோதல் நடந்தது. கத்தி, வாள், கல், கைக்குண்டுகளால் சஹ்ரான்குழு தாக்கியது. ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகி பலர் கைதாகினர். ஆனால் சஹ்ரானும், அவரது சகோதரன் ரில்வானும் கைதாகவில்லை.

சஹ்ரான், அவரது குழுவினர் பற்றி காத்தான்குடி முஸ்லிம்கள் தொடர்ந்து முறைப்பாடு செய்தனர் என தெரிவித்தார்.