கூடுதல் அதிகாரங்களுடன் அஜித் டோவலுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி  

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், கூடுதல் அதிகாரங்களுடன், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, பணி நீடிப்புச் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வந்துள்ளதை அடுத்து, இந்திய மத்திய அமைச்சரவையின்  உயர் பதவிகளுக்கான நியமனக் குழு இதுதொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதற்கமைய, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் டோவல், 2019 மே 31ஆம் நாளில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு பணி நீடிப்புச் செய்யப்படுவதாக நேற்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், அவருக்கான அதிகாரங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

முன்னர், மத்திய இணை அமைச்சருக்குரிய அதிகாரங்கள், அந்தஸ்துடன் இருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பதவி, தற்போது, அமைச்சரவை அந்தஸ்துடைய மத்திய அமைச்சருக்குரிய அதிகாரங்கள் கொண்டதாக விரிவாக்கப்பட்டுள்ளது.