யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் கைக்குண்டை எடுத்து விளையாடியபோது அது வெடித்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

‘சிறுவனின் முகம், வயிறு மற்றும் கால்ப்பகுதியில் காயங்கள் உள்ளன. சிறுவனை சிரி ஸ்கான் எடுக்கப்பட்டது. அவரது வயிற்றுப் பகுதியில் குண்டின் சிதறல்கள் உள்ளன. அவற்றை அகற்றுவதற்கு சிறுவன் சத்திரசிகிச்சைக்கு உள்படுத்தப்படுவார். அவருக்கு அவசர சிகிச்சை வழங்கப்படுகிறது’ என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

இந்த சம்பவம் புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியில் நேற்று (9) மதியம் இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.சிந்துஜன் (வயது-15) என்ற மாணவனே இவ்வாறு படுகாயமடைந்தார்.

சிறுவனின் பெற்றோர் இந்தியாவில் இடம்பெறும் திருமண நிகழ்வுக்குச் சென்றுள்ளனர். சிறுவன் இன்று நண்பகல் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளான்.

இதன்போது பயன்பாடற்ற காணி ஒன்றிற்குள்ளிருந்து கைக்குண்டு ஒன்றை அவன் எடுத்துள்ளான். அந்த கைகுண்டை வீதியில் எறிந்து விளையாடிய நிலையில் குண்டு வெடித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்’ என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை யினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.