இப்பிரதேசத்து தண்ணீர்

நன்னீர் வளத்திற்கு பெயர்போன யாழ்.மண்ணில் இப்போது நீர் விஷமாகிறது. சுன்னாகத்தில் ஒயிலாகிறது,  தீவகத்தில் உவராகிறது.  ஆனால் தென்மராட்சி நாவலடி பகுதியில் தண்ணீர் கலராகிறது.

தென்மராட்சி நாவலடிப்பகுதியில் கிணறுகள் சவராக இருப்பது இக்கிராம மக்களின் வாழ்க்கையில் நெடுநாள் சவாலாக இருக்கின்றது.

நீருக்கு மணமில்லை , நிறமில்லை , சுவையில்லை என்பார்கள் ஆனால் இங்குள்ள கிணற்று நீர்களில் இவை மூன்றுமே உள்ளதுதான் இந்த ஊர் கிணற்றுத் தண்ணீர்.

நீர் கடும் மஞ்சள் நிறமாக உள்ளதோடு லேசான சேற்று நாற்றமும் வீசாமலில்லை. குடிக்கும்போது கயர்ப்புத் தண்மையுடையதாகவும் இருக்கின்றது.

சாதாரண கிணற்று நீர்தான் இவ்வாறு இருக்கிறது என்றால், குழாய்க்கிணறுகள் மூலம் பெறப்படும் நீரின் நிலையும் அவ்வாறுதான். ஆனால் சற்று விதி விலக்கு, நீரை எடுக்கும்போது பளீச்சென்று   இருக்கும் ஆனாலும் சில மணிநேரங்களிலேயே மஞ்சள் கரைத்த நீர்போல் ஆகிவிடும்.

இப்பகுதியிலுள்ளோர் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் இக்கிணற்று நீரையே பாவிக்கின்றனர். இவர்கள் தமது பிள்ளைகளின் சீருடைகளை தோய்ப்பதற்காக நீரை வெகுதூரம் சென்றே பெறுகிறார்கள்.

தண்ணிக்குப் பயம்
“தண்ணிக்குப் பயந்து சாதாரணமாக அணியும் ஆடை உட்பட விஷேடங்களுக்கு அணியும் ஆடைகள்வரை வெள்ளை நிறம் கலந்த ஆடைகளை உடுத்துவதில்லை” என்கிறார் பாடசாலை மாணவி கிருஷா.

நீர் என்பது அழுக்குகளைப் போக்கத்தான் ஆனால் நீரில் குளிப்பதனால் அழுக்காக ஆகின்றோம் என்கின்றனனர் இப்பிரதேசவாசிகள்.

கூல் தண்ணீரில் குளிக்கும் அவலம்
நாவலடிப் பிரதேச இளைஞன் சுதன் தாம் படும் பாட்டினை இவ்வாறு விளக்குகிறார்.
இந்த தண்ணிக்குள்ள எந்தப் பொருளைப் போட்டாலும் தண்ணி சவராக இருக்கிறதால ,போட்ட பொருள் தெரியாது. குளிக்கும்போது தண்ணித் தொட்டிக்குள்ள சவுக்காரத்தை விழுத்திட்டு அதை எடுக்க படாத பாடு படுவன். அப்படியே தடவி எடுக்குறதுக்குள்ள தண்ணி இன்னும் கலங்கி குளிக்க முடியாம போயிடும். இதனால ப்ரிஜ்ல இருக்கிற தண்ணிய எடுத்து குளியலை முடிச்சுடுவேன்” என்று தன் அனுபவத்தைச் சிரித்துக்கொண்டே கூறுகிறார் சுதன்.

ஏன் சவராகிறது?
இவ்விடயம் தொடர்பாக இலங்கை நீர்வள சபை யாழ்.மாவட்ட அதிகாரிகள் சில விடயங்களை தெளிவு படுத்துகின்றனர்.

“பொதுவாக தென்மராட்சிப் பகுதிகளில் சில இடங்கள் நீர் சவராக இருப்பது பிரச்சினைககு உரிய விடயம்தான். ஆனால் இந்நிலையை சமாளிக்க அனைவரும் ஏதாவது சுத்திகரிப்பு முறையை பாவிப்பதே சிறந்ததாகும்.

இங்கு மணல் தரை என்பதாலும் நீரில் அதிகளவு அயன் கலந்துள்ளமையாலும் நீர் நிற மாற்றம் அடைகின்றது. மற்றும் அதிக வெயில் காலங்களில் இவ்வாறு நிகழ்வதற்குரிய சாத்தியம் உள்ளது. ஆனாலும் குழாய்க் கிணறுகளை திட்டமிட்டு அமைப்பதன் மூலம் இந்நிலையை ஓரளவுக்கு சமாளித்துக் கொள்ளலாம்” என்கின்றனர்.

ஏற்படும் ஆபத்து
நீர் சவராகும் பிரச்சினை நாவலடி மக்களுக்கு புதிது இல்லை என்றாலும் இந் நீரை பருகுவதனால் ஏற்படும் ஆபத்தை விளக்குகிறார் வைத்தியர் கே.செல்வநாயகம்.

பொதுவாக நீர் மூலம் வாந்திபேதி, வயிற்றோட்டம், சிறு நீரகக்கல் , கல்லீரல் அழற்சி போன்றன ஏற்படும். இதில் கல்லீரல் அழற்சி மற்றும் வயிற்றோட்டம் என்பன உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியன. ஓவ்வொரு நாளும் நீரோடு செல்லும் அயடின் கல்சியம் போன்றன உடலில் வெவ்வேறு வகையான தீங்குகளை ஏற்படுத்துகின்றன. என்கிறார் அவர்.

தீர்வு
இப்பிரச்சினையால் அவதிப்படும் இவர்களுக்கு தீர்வே இல்லையா? என்றால்.., இருக்கிறது என்கிறார். குழாய்க்கிணறு அடிக்கும் நடேசு சிவபாலன்.

நீர் சவராகாமல் இருப்பதற்கு நாங்கள் தீர்வு வைத்துள்ளோம். குழாய்க்கிணறு அடிக்கும்போது குழாய்களை பொருத்தும்போதே அதற்கு சில சுத்திகரிப்பு பொறிமுறைகளை ப் பின்பற்றி பொருத்துவதன் மூலம் நீர் சவராகுவதை ஓரளவு கட்டுப் படுத்துகின்றோம். இதற்காக சிறுதொகைப்பணமே மேலதிகமாக அறவிடுகின்றோம். என்கிறார் அவர்.

நீர் என்பது இறைவனால் எமக்கு அளிக்கப்பட்ட கொடை, ஒருவருடைய வீட்டில் நல்ல நீர் வருவதும், பாவனைக்கு ஒவ்வாத நீர் வருவதும் அவரவர் விதி போலும் ஆனால் கிடைத்த நீரை தகுந்த முறையில் சுத்திகரித்து தூய நீராக அருந்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்வதுடன் நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவும் வழிவகுக்கும்.

 

-உத்தமன்-