இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஜேம்ஸ் அண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை – இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. காலே, பல்லேகெலேயில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. 3ஆவது டெஸ்ட் நாளைமறுநாள் (23ஆம் திகதி) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

முதல் இரண்டு போட்டிக்கான ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஜேம்ஸ் அண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள்தான் அசத்தினார்கள்.

கொழும்பு டெஸ்டிற்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில்தான் தயார் செய்யப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் அண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அண்டர்சனுக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பிராட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாம் குர்ரானுக்குப் பதில் பேர்ஸ்டோவ் அணியில் இடம்பிடித்துள்ளார்.