உயிர்ப்பு ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியும் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவருமான மொகமெட் சர்ஹான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் இருவரும் கண்டியிலுள்ள ஹின்குள்ள பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட 102 சந்தேகநபர்கள் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவர்களில் 77 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய 25 பேரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர“ என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.