சாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ஏ.ரி.எம்) போலி அட்டையைவ் செலுத்தி பணம் பெற முயன்ற நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த வங்கியின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) இன்று காலை நபர் ஒருவர் போலி அட்டையைப் பயன்படுத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தத் திருட்டு முயற்சியை வங்கி முகாமையாளருக்கு அபாய ஒலி மூலம் இயந்திரம் தெரியப்படுத்தியது.

அதனை அடுத்து துரிதமாக செயற்பட்ட முகாமையாளர், பொலிஸாருக்கு அறிவித்தார். அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது, அவர் பொலிஸாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

எனினும் பொலிசார் சந்தேகநபரை துரத்திச் சென்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை போலிஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.