அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வெனிசுவேலா நாட்டின் மறைந்த அதிபர் ஹியூகோ சாவேஸ். அவரது மறைவுக்குப் பிறகு அதிபரான நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியில் அரசியல் சர்ச்சைகள் அடிக்கடி தோன்றுகின்றன. நிலையற்ற தன்மையும், ஜனநாயக சிக்கல்களும் அவ்வப்போது எழுகின்றன.

இந்நிலையில், அதிபர் நிக்கோலாஸ் மதுரோவின் அரசை கவிழ்க்கும் முயற்சியாக புதன்கிழமை நடைபெறும் பேரணியில் பல்லாயிரக்கணக்கான வெனிசுவேலா மக்கள் பங்கேற்பார்கள் என்று கருதப்படுகிறது.

இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்கா வெளிப்படையாக தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

1958ம் ஆண்டு வெனிசுவேலாவின் ராணுவ சர்வாதிகாரம் வீழ்ச்சியடைந்த 61வது ஆண்டை குறிப்பதாக இந்த போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்யும் தேசிய பேரவையின் தலைவர் குவான் குயெய்டோ, “மக்களுடனான வரலாற்று சந்திப்பு” என்று இதனை தெரிவித்திருக்கிறார்,

இந்த போராட்டத்திற்கு அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

‘வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில்’ இது பற்றி கருத்து எழுதியுள்ள மைக் பென்ஸ் “இந்த தேசிய பேரவையையும், குயெய்டோவையும் ஆதரிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நிக்கோலாஸ் மதுரோவுக்கு அரசதிகாரத்தில் உரிமையில்லை. அவர் வெளியேற வேண்டும்” என்று பென்ஸ் எழுதியுள்ளார்.