வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க ஆரம்பமாவதாக இருந்த ‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று அறிவித்தார். இந்த விவகாரத்தில் தயாரிப்பாளருக்குத்தான் தனது ஆதரவு என இயக்குனர் வெங்கட்பிரபுவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சிம்பு ரசிகர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். நேற்று சமூக வலைத்தளங்களில் அவர்கள் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான் திட்டமிட்டபடி படத்தை ஆரம்பிக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

‘சிம்புவை எப்போதுமே கீழே தள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பமாக இருந்தது. சிம்புவிடமிருந்து அனைத்தையும் பெற்று அதை செயல்படுத்த முடியாமல் விட்டுவிட்டனர். சிம்புவிடமிருந்து அவரது ரசிகர்களைப் பிரிக்கவும் திட்டமிட்டனர். ஆனால், சிம்பு ரசிகர்களாகிய நாங்கள் எமோஷனலானவர்களாக இருந்தாலும் அவருக்கு உண்மையாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்கள்.

படப்பிடிப்புக்காக சிம்பு திகதிகளை ஒதுக்கிக் கொடுத்தாலும் அந்த திகதியில் படப்பிடிப்பு நடத்தாமல் வீணடித்து விட்டனர். தயாரிப்பாளருக்கு படத் தயாரிப்புக்குரிய பணத்தைப் புரட்டுவதில் பிரச்சினை வந்த காரணத்தால் தான் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அதை மறைக்க சிம்பு மீது வீண் பழி சுமத்துகின்றனர் என அவர்கள் கூறுகிறார்கள்.