சிறிலங்காவுக்கு 300 மில்லியன் டொலர் கடனை வழங்குகிறது சீன வங்கி

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்காவுக்கு, 300 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீன வங்கி (Bank of China) முன்வந்துள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், பெறப்பட்ட கடன்களுக்கு, 5.9 பில்லியன் டொலரை இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா உள்ளது. இதில், 2.6 பில்லியன் டொலர் வரும் மார்ச் மாதத்துக்குள் திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது.

இதில், 1 பில்லியன் டொலர் மாத்திரம், திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீன வங்கி 300 மில்லியன் டொலர் கடனை வழங்க முன்வந்துள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இது சிறிலங்காவுக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சீன வங்கி வழங்க முன்வந்துள்ள கடனுக்கு மேலதிகமாக 700 மில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக பதில் நிதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.