மனித வாழ்வியலில் சிறுவர் பராயம் என்பது பரிணாமத்தின் ஒரு பகுதியாகும். ஒரு சமூகத்தின் சிறுவர்கள் எதிர்கால சரித்திரங்களை நிர்ணயிக்கப் போகும் மூலாதாரங்கள்.

சமூகத்தின் மிகச் சிறிய கட்டமைப்பு அலகான குடும்பத்தின்; ஆக்க அலகுகளாக பெற்றோர்களும், அவர்களை ஒளியூட்டும் ஒளி விளக்குகளாக குழந்தைகளும் காணப்படுகின்றனர். தாம் பெற்றெடுத்த குழந்தைகள் நட்சத்திரங்களாக சமூக வானில் மிளிர வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோர்களினதும் அவாவாகும். ஆற்றலும் ஆளுமையும் உள்ள பிள்ளைகளை உருவாக்க வேண்டுமெனில் கருவறையிலிருந்தே பிள்ளைக்கு கற்பித்தலை வழங்க வேண்டும். குழந்தையானது தனது தாயின் கருவறையில் இருக்கும்போதே கற்க ஆரம்பித்துவிடுகிறது. இதனை அடுத்து தனது குடும்பம் குடும்பத்துடன் தொடர்புடைய சூழலிலிருந்தும் கற்றுக்கொள்கிறது. இதனாலேயே குழந்தையின் முதல் ஆசான் தாய் ஆகின்றாள்.

இதனை அடுத்து குழந்தை தாய் மடியில் இருந்தும் தாயெனும் ஆசானிடம் விடைபெற்று முன்பள்ளி எனும் வட்டத்தினுள் நுழைகின்றது .

இவ்வாறாக குடும்பத்தில் இருந்து சற்று விலகி புதுமுகங்களுடன் பழக ஆரம்பிக்கும் குழந்தை புதிய சூழலுடன் இசைவாக்கப் படவும் இசைந்து செல்லவும் கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது .

பலதரப்பட்ட சூழலில் இருந்து வரும் குழந்தைகளை வழிப்படுத்தி அவர்களை ஒழுங்குபடுத்தி வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஆசிரியருக்கு காணப்படுகின்றது .சிறுவர்களின் வளர்ச்சியில் முதற்கட்ட கல்வியில் செல்வாக்குச் செலுத்துபவராக முன்பள்ளி ஆசிரியர் விளங்குகின்றார்.

மனித வாழ்வில் பிரதான வளர்ச்சி கட்டங்களாக குழந்தைப் பருவம், பிள்ளைப்பருவம் ,கட்டிளமைப் பருவம் ,வளர்ந்தோர் பருவம் என வகைப்படுத்தலாம் .இவற்றில் பிள்ளைகளின் ஆரம்பநிலை விருத்தி பருவமானது மிக முக்கியமானதாகும் .ஏனெனில் இதிலேதான் பிள்ளையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அறிவுசார் அம்சங்களுக்கான அத்திவாரம் இடப்படுகிறது. அந்த வகையில் அது தொடர்பான அறிவை கொண்டிருத்தல் ஆசிரியர்களுக்கு இன்றியமையாததோடு வெற்றிகரமான கற்பித்தல் செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கும்.

குழந்தைப் பருவத்தில் சகல விதமான அடிப்படை ஆற்றலோடும் பிறக்கும் சாதாரண குழந்தை தான் வாழும் சூழலுக்கேற்றவாறு தூண்டல் துலங்கல்களை காட்டும் அதேவேளை தன்னுடைய வாழும் தன்மையையும் வளர்ச்சியையும் நிச்சயிக்க முற்படும் .குழந்தையின் வாழ்வில் முதல் வருடம் ஆனது விருத்திக்குரிய சாதகமான சூழலை வழங்குவதோடு தன் சார்பான வளர்ந்தோரிலேயே முற்றாக தங்கியிருக்கும். அதனை அடுத்த வருடம் குழந்தையால் மொழியை முழுமையாக பயன்படுத்த முடியாவிட்டாலும் அசைவிற்கேற்ப திறன்களை பெற்றுக் கொண்டு மெதுவாக ஆரம்பிக்கிறது.

பாடசாலை வாழ்வின் தொடக்கம் முதல் முடிவு வரையிலான காலப்பகுதியில் பிள்ளைக்கு சிறந்த விருத்தி ஏற்பட வேண்டுமெனில் இயற்கையான உடல் வளர்ச்சி மட்டுமன்றி கற்றலும் நடைபெற வேண்டும்.

கற்றல் இன்றி உடல் வளர்ச்சியோ உடல் வளர்ச்சியின்றி கற்றலோ வெற்றிகரமான பிள்ளை விருத்திக்கு ஏதுவாக அமையாது. எனவே கற்றல் உடனான இயற்கை விருத்தி பிள்ளை விருத்திக்கு இன்றியமையாததாகும். பிள்ளை விருத்தியில் பிறப்பு முதல் 19 வயது வரை ஏற்படுகின்ற கற்றலும் வளர்ச்சியும் இன்றியமையாததாகும். ஏனெனில் இக்காலப்பகுதியிலேயே பிள்ளை உடல் ,உள ,மனவெழுச்சி ,  சமூகம்,ஒழுக்கம் சார் வளர்ச்சிகள் ஏற்படுகின்றன.

குழந்தை பிறந்தது முதல் பாடசாலை கல்வி முடியும் வரை உள்ள மிகவும் நீண்டதொரு காலப்பகுதியை தமது வளரும் காலமாக கொண்ட குழுவினரையே ‘ பிள்ளைகள்’ என உளவியலாளர்கள் கருதுகின்றனர். பிள்ளைகளிடத்தில் சிறந்ததொரு விருத்தி ஏற்பட வேண்டுமாயின் பிள்ளை வளர்ச்சியுடன் கற்றலும் நடைபெறவேண்டும்.

கல்வியின் முக்கிய நோக்கம் குழந்தை வளர்ச்சி கூறுகள் சிறந்த முறையில் வளர்ச்சி அடைவதோடு பயன்மிக்க கற்றலும் இடம்பெற வேண்டும் என்பதாகும். பிள்ளைகளிடத்தில் கற்றல் இன்றி இயற்கையான வளர்ச்சி இடம்பெறுமாயின் அது உண்மையான பிள்ளை விருத்தியாக அமையாது.எனவே பிள்ளை விருத்தி என்பது கூறுகளாக நிகழ்வதில்லை .இது ஒரு வளர்ச்சி கற்றலுடன் சேர்ந்த ஒரு முழுமையான விருத்தியில் தான் நாம் பூரணமான பிள்ளை ஒன்றை உருவாக்க முடியும்.

இவ்வாறு வளர்ச்சியும் கற்றலும் இணைந்த கூறுகளாக உடல் வளர்ச்சி, உள வளர்ச்சி மனவெழுச்சி வளர்ச்சி, சமூக வளர்ச்சி ,ஒழுக்க வளர்ச்சி என ஐந்து பிரிவுகளை பற்றி நாம் தெரிந்து இருப்பது அவசியமாகும். பிள்ளை விருத்தியில் பிறந்தது முதல் 19 வயது வரை ஏற்படுகின்ற வளர்ச்சியும் கற்றலும் மிகவும் முக்கியமானதாகும்.

இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் இறுதிக்கூற்றில் நிகழ்ந்து வரும் துரித மாற்றங்களுக்கு புதிய அறிவுத் தொழில்நுட்ப விருத்தியும் தேவையாக உள்ளது. இவ்வாறான நிலைகளை உள்வாங்கி அதற்கேற்ப துலங்கலை காட்டக் கூடிய விதத்தில் ஆசிரியர்கள் செயற்படவேண்டியவர்களாக உள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆசிரியர்கள் பல்வேறான விடயங்களை உள்வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மேரி பேத்‘ என்பவரின் கருத்துப்படி ‘ஒரு வினைத்திறனுடைய ஆசிரியரின் செயற்பாட்டில் முக்கியமானது வகுப்பறையில் கற்றல் செயன் முறையை ஏற்படுத்துவதே’ ஆகும் என்கிறார்.

கல்வி சிந்தனையாளரான பெஸ்டலோசி குறிப்பிடும்போது ‘ஆசிரியர்கள் குழந்தையின் சிந்தனையாற்றல், தலைமைத்துவங்கள், ஆக்கத்திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு உதவ வேண்டும் ‘ என்கிறார் .

ஆசிரியர்கள் தனி மனிதனையும், சமூகத்தையும் ஏன் முழு உலகையும் கூட உருவாக்குபவர்கள்.ஆசிரியர்கள் அன்றி கல்வி செயன்;முறை இடம்பெற இயலாது.கல்வியின் நோக்கங்கள் எவ்வளவு சிறந்தனவாக இருப்பினும் கல்வி நிர்வாகம் எவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக இருப்பினும் கல்வி கற்பதற்கான உபகரணங்கள் எவ்வளவு தரமானதாகவும் காலத்துக்கு ஏற்றனவாயும் இருப்பினும் அவற்றால் மாணவர்கள் அடையும் பயன் ஆசிரியர்களை பொறுத்ததேயாகும்.

வகுப்பறைச் செயற்பாடுகளை நிறைவேற்றும் ஆசிரியர்கள் மாணவனை தயார்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கவேண்டும். மாணவர்கள் பல்வேறான சூழலிலிருந்து வந்திருக்கக்கூடும். ஒவ்வொரு மாணவனையும் முதலில் கேட்பதற்கு ஆயத்தப்படுத்தி தனது கற்பித்தலை தொடங்குதல் வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் நலனின் அடிப்படையில் கல்வியில் 5நு முறை என்னும் ஓர் உளவியல் சார் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறையிலேயே ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதாவது மாணவர்களிடையே ஈடுபடுதல், கண்டறிதல், விளக்குதல், விரிவுபடுத்தல், மதிப்பிடல் போன்ற செயற்பாடுகளின் மூலம் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான முறை உளவியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அமைகிறது . இதன் மூலம் ஆசிரியர்கள் செய்து காட்டல், வாசிப்பு ,சிந்தனை, கேள்விகளைக் கேட்டல்,விளக்கம் அளித்தல் போன்ற பல்வேறு முறைகளில் செயற்படவேண்டியுள்ளது.மேற்கூறியவற்றை தொகுத்து நோக்கும்போது ஆசிரியர் தன்னிடம் வரும் சிறுவர்களை அவர்களின் தன்மைகளை இனங்கண்டு அவர்களின் வளர்ச்சி பற்றிய அறிவுடன் வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்துதல் அவசியமாகும்.

ஏனெனில் நிகழ்கால வகுப்பறைகளே எதிர்காலத் தலைவர்களை தீர்மானிக்கின்றன.

இவ்வாறான அறிவு அனுபவத்துடன் கற்பித்தலில் ஈடுபடல் ஆனது பிள்ளையின் கல்விச் செயற்பாட்டில் சிறந்த விருத்தியை ஏற்படுத்தும். பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளில் விருத்தியை ஏற்படுத்துவதற்காகவே இலங்கை அரசு 5E methods, smart classes, play school, early childhood education, preschool courses  போன்றவற்றினை ஏற்படுத்தியும் நடைமுறைப்படுத்தியும் உள்ளது. எனவே பிள்ளைகளின் வளர்ச்சி பற்றிய பூரண அறிவுடன் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுவதால் சிறந்த முறையில் சிறுவர்களிடையே விருத்தியை ஏற்படுத்துவதோடு நவீன சூழலுக்கேற்றவாறு ஆற்றலும் ஆளுமையும் உள்ள இளைய தலைமுறையினரின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட முடியும்.

 

இக் கட்டுரை கிழக்குப் பல்கலைக்கழக, கல்வி பிள்ளை நலத்துறை பீட, இரண்டாம் வருட மாணவி லமீனா வேலும்மயிலும் என்பரால் எழுதப்பட்டது. இக் கட்டுரை ஆக்கத்தில் யாழ்தேவி செய்திக்குழுமம் பங்களிப்பு ஆற்றவில்லை.