சிவலிங்கத்திற்குப் பின்னால் இருக்கும் கணித ரகசியம்

உலகில் உள்ள அனைத்து இந்து மத மக்களாலும் வணங்கப்படும் கடவுள் என்றால் அது சிவபெருமான்தான். மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் லிங்க வடிவத்தில்தான் உலகம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்படுகிறார். நடராஜ உருவம் தவிர இவரை அனைத்து கோவில்களிலும் லிங்கவடிவில் வைத்தே வழிபடுகிறார்கள்.

அனைத்து இடங்களிலும் சிவபெருமானை லிங்க வடிவில் வழிபடுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. ஒவ்வொரு இடத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்ப இந்த காரணங்கள் மாறுபடும். காரணங்கள் மாறுமே தவிர லிங்கத்தின் உருவம் மாறாது. அதற்கு காரணம் சிவலிங்கத்தின் பின்னால் இருக்கும் நம்பிக்கை மட்டுமல்ல சிவலிங்கத்தில் இருக்கும் கணிதமும் தான். இந்த பதிவில் சிவலிங்கத்தின் வடிவத்திற்கு பின்னால் இருக்கும் கணிதம் என்னவென்று பார்க்கலாம்.

நாம் இதுவரை நம் வாழ்வில் எண்ணற்ற சிவலிங்கத்தை பார்த்திருப்போம். அனைத்து இடங்களிலும் சிவலிங்கத்தின் அளவு சிறியது, பெரியதென மாறுமே தவிர அதன் நீள்வட்ட முட்டை வடிவம் எந்த இடத்திலும் மாறவே மாறாது.

ஏன் சிவலிங்கம் எப்போதும் கோளவடிவத்திலேயே இருக்கிறது என்று என்றாவது சிந்தித்து பார்த்துளீர்களா? அப்படி என்ன கோளவடிவத்தில் சிறப்பு இருக்கிறது. கணிதத்தை பொறுத்தவரையில் கோள வடிவம்தான் ஒரு சிறந்த பரிபூரணமான வடிவமாக கருதப்படுகிறது. இது சிறந்த உருவம் என்று அழைக்கப்பட காரணம் இது அதிக பரப்பளவை உள்ளடக்கி இருப்பதால்தான்.

இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து பொருள்களுமே ஏதோ ஒருவகையில் கோளவடிவத்தை அடைய முயற்சி செய்கிறது. கீழே விழும் தண்ணீர் கூட கோள வடிவத்தில்தான் விழுகிறது அல்லவா?

கோள வடிவம் சரியான நிலையை பிரதிபலிக்கிறது, ஆன்மீகரீதியாக பார்த்தால் இது கடவுளின் வடிவமற்ற தன்மையை உணர்த்துகிறது. மேலும் இது இந்த அண்டம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது என்றும் உணர்த்துவதாக இருக்கிறது.

பூரண வடிவமான கோளத்தின் நீட்சிதான் நீள்வட்டமாகும். நீள்வட்டத்திற்கு இரண்டு மையங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சிறந்த உதாரணம் முட்டை ஆகும். இதனை எந்த சமமான பரப்பில் வைத்தாலும் அது சமமாக நிற்காது அதேசமயம் இதற்கு எந்த முனைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பூரணமான அதேசமயம் வடிவமில்லாத உருவத்தில் ஈசனை வணங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் நினைத்த போது உருவானதுதான் நீள்வட்ட வடிவம். எங்கும் நிறைந்திருக்கும் ஈசனை நம் முன்னோர்கள் கோள வடிவத்தில் இருந்து மாற்றி அதன் நீட்சியான நீள்வட்ட உருவத்தில் வழிபட தொடங்கினர். நீள்வட்டத்திற்கு எப்படி விளிம்புகள் இல்லையோ அதேபோல ஈசனுக்கும் எல்லை இல்லை என்பதை இது உணர்த்துகிறது.

உண்மையில் சிவலிங்கள் பிரதிபலிப்பது இந்த அண்டத்தைத்தான். உருவமற்ற பொருட்களை உருவத்துடன் இணைப்பதை இது உணர்த்துகிறது. அதாவது கோளத்தில் இருந்து நீள்வட்டத்திற்கு மாற்றப்பட்டதை உணர்த்துகிறது.

சிவபெருமானின் உருவம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். கையில் சூலமும், கழுத்தில் நாகமும், கொண்டையில் கங்கையும், இடுப்பில் தோலுடையாகவும் பார்க்கும்போதே திவ்ய உருவத்தில் காட்சியளிப்பார். ஆனால் இந்த திவ்ய உருவத்தை விடுத்து ஏன் லிங்கவடிவில் ஈசனை வணங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் நிச்சயம் எழும்.

சிவபெருமானின் லிங்கத்தின் உருவத்திற்கு பின்னால் இருக்கும் காரணத்தை மேலே பார்த்தோம். ஆனால் அதனை பற்றி மேலும் விளக்குவதுதான் லிங்கபுராணம் ஆகும். லிங்கபுராணத்தின் படி பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் முன்னாடியே தோன்றியவர் சிவபெருமணம் ஆவார். அவரின் பிறப்பை பற்றி அறிந்தவர் எவருமில்லை.

ஈசனின் ஆதியையும், அந்தத்தையும் அறிய முயன்று அதில் பிரம்மாவும், விஷ்ணுவும் தோற்றதை நாம் அறிவோம். இதன்மூலம் ஈசனுக்கு முதலோ, முடிவோ கிடையாது என்று நாம் அறியலாம். அதேபோலத்தான் சிவலிங்கத்தின் வடிவமும். எல்லைகளே அற்ற நீள்வட்டத்தின் தொடக்கத்தையும், முற்றுப்புள்ளியையும் அதனை இயற்றியவரை தவிர யாராலும் அறிய முடியாது. இதனை உணர்த்தும் விதமாக்கத்தான் நமது முன்னோர்கள் சிவபெருமானை நீள்வட்ட வடிவிலிருக்கும் லிங்க உருவில் வழிபட்டனர்.