சீனாவிடம் பெறவுள்ள 2 பில்லியன் டொலர் கடனுதவியில், முதற்கட்டமாக 300 மில்லியன் டொலர் இந்த வாரம் சிறிலங்காவுக்குக் கிடைக்கும் என்று தகவல்கள்  தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கு 2 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு  சீனா இணங்கியுள்ளது. இதில் 1 பில்லியன் டொலர் கடன் திறைசேரி பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும்.

மற்றொரு 1 பில்லியன் டொலர் கடனை, மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 300 மில்லியன் டொலர் இந்த வாரம் சிறிலங்காவுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, நிதியமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மொகமட் ஹசன் தெரிவித்தார்.

கடன் விதிமுறைகள் தொடர்பான பேச்சுக்கள் நடந்து வருகின்றன. சீன வங்கி (Bank of China) இந்த வாரம் கடனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்தக் கடன் தொகை அரசாங்க பயன்பாட்டுக்காக திறைசேரியிடம் வழங்கப்படும். எந்த அபிவிருத்தித் திட்டத்துக்கும் பயன்படுத்தப்படாது.

எஞ்சிய 700 மில்லியன் டொலர் கடன் தொடர்பாக அதற்குப் பின்னர் பேசப்படும்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக, சீனாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து சிறிலங்கா அரசாங்கம் 1 பில்லியன் டொலர் கடன் கோரியுள்ளது.

இந்தக் கடன் தொடர்பான பேச்சுக்கள் நடத்தப்பட்ட பின்னர், மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தை சீன நிறுவனங்களிடம் கையளிப்பதற்கான கேள்விப்பத்திரம் கோரப்படவுள்ளது என்றும் நிதியமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மொகமட் ஹசன் தெரிவித்துள்ளார்.