சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி முதல் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் வீதி மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடைகளை சூறையாடி அங்குள்ள பொருள்களைக் போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு பொலிஸார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் போராட்டக் காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த வன்முறைப் போராட்டங்கள் மற்றும் பொலிஸ் நடவடிக்கைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பேர் பாதுகாப்பு படையினர் என்றும் கூறப்பட்டுள்ளது.


போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியிருப்பதால் அனைத்து பகுதிகளிலும் கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் வன்முறைகளால் கடும் அதிருப்தி அடைந்த வடக்குமாநிலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இது ஆளும் கூட்டணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.