ஜனாதிபதிக்கான நிதி ஓதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தையடுத்து அதற்கு வாக்கெடுப்பின்றி சபையால் ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

எனினும் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர் கோரினார். அவரது கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்ததுடன், அவரைக் கடிந்துகொண்டார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதம் இடம்பெற்றது. எனினும் ஜனாதிபதி இன்று நாடாளுமன்றுக்குச் சமூகமளிக்காமல் கென்யாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் பங்கேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இருவரும் மைத்திரிபால சிறிசேனவை கடுமையாகச் சாடினர்.

இந்த நிலையில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதியின் செலவுகளாக 13.5 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 8.2 பில்லியன் ரூபா அபிவிருத்தி செயற்பாடுகளுக்கானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.