ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னரே, புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன்னதாக, கூட்டணியை அமைப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், சஜித் பிரேமதாச நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘பெரும்பான்மையான ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு அமையவும், கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் முடிவுக்கு அமையவும், ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னரே இத்தகைய கூட்டணி உருவாக்கப்பட வேண்டும்.

இது எனது தனிப்பட்ட கருத்தும் கூட. இந்த முறையில் செயற்பட்டால் மட்டுமே முன்மொழியப்பட்ட கூட்டணி வெற்றிகரமாக வெளிப்படும்.

மேலும் ஏராளமான பிற கட்சிகளும் தனிநபர்களும் சேர்ந்து அதை ஒரு வலுவான கூட்டணியாக மாற்றிக் கொள்ளவும் முடியும்.

எனவே, தவறான செய்திகளை வெளியிடுவதிலிருந்து விலகி, ஜனாதிபதி வேட்பாளரை பரிந்துரைப்பதில் ஒரு உடன்பாட்டை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.