ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து, குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தும், காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்தும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

அதற்கான அதிகாரபூர்வ அறிக்கை குடியரசுத் தலைவரின் கையொப்பத்துடன் ஊடகங்களில் வெளியாகின. இந்த நிலையில் வழக்கறிஞர் எம்.எல் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறாமல் 370வது சட்டப்பிரிவை நீக்க குடியரசு தலைவர் உத்தரவிட்டது சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரான சர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.