சென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸ் ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலின் போது, அதிமுக சார்பில் வழங்கப்பட்ட வேட்புமனு, பி வடிவத்தில், ஏ.கே.போஸ் வேட்பாளராக முன்மொழியப்பட்டு, அதில் ஜெயலலிதா கைரேகை என்று ஒன்று காண்பிக்கப்பட்டது.

ஜெயலலிதா அப்போது அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காரணத்தால், இது அவரது ஒப்புதலுடன் பெற்ற, கைரேகையாக இருக்க முடியாது என்று ஏகே போஸை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் இன்று நீதிபதி வேல்முருகன் தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுக படிவத்தில் இருந்தது ஜெயலலிதா கைரேகைதான் என்று அரசு மருத்துவர் பாலாஜி தெரிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஏகே போஸ் பெற்ற வெற்றி செல்லாது என்று ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இடைத்தேர்தல் நடத்த வசதியாக தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே சரவணன் தனது வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டார். எனவே இந்த வழக்கில் யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது.

இடைத் தேர்தல் நடத்துவதை தவிர தேர்தல் ஆணையத்திற்கு வேறு வழி இல்லை. எப்போது நடத்தப்படும் என்பதே இப்போதுள்ள கேள்விக்குறி.

ஆனால், அப்பல்லோவில் ஜெயலலிதாவிடம் பெற்ற கைரேகை போலியானது அல்லது அவர் சம்மதம் இல்லாதது, என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் கொண்டது.

இந்த தீர்ப்பின் மூலம், ஜெயலலிதாவிடம் பெற்ற கைரேகையில் பெரும் குளறுபடி நிகழ்ந்துள்ளது இப்போது நிறுபனமாகிவிட்டது என்று சரவணன் இன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதிகாரி ஒருவர் மூலமாக இதுபோன்ற கைரேகையை பெற முடியுமே தவிர, மருத்துவர் ஒருவரால் இதுபோல கைரேகை பெறமுடியாது என்று நாங்கள் வாதத்தின்போது தெரிவித்தோம். அதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது, என்றும் சரவணன் தெரிவித்துள்ளார்.

அப்படியானால் அதிமுக பி படிவத்தில் ஜெயலலிதா ஒப்புதல் இல்லாமல் கைரேகை பெறப்பட்டதா, அல்லது அது வேறு யாருடைய கைரேகையுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. அப்போது ஜெயலலிதாவுடன் மருத்துவமனையில் இருந்த சசிகலா குழுவினரை நோக்கி இந்த கேள்விக் கணைகள் இப்போது எழுந்துள்ளன.

ஜெயலலிதா இந்த கைரேகை வைக்கும் போது சுயநினைவில் இருந்தாரா, இல்லையா என்பது தொடர்பான என்ற ஒரு சான்று ஆவணங்களும் அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.