ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்போகும் வேட்பாளரை ஜே.வி.பி. தீர்மானித்து விட்டது என்றும், ஆனால் ஓகஸ்ட் 18ஆம் திகதி வரை அதனை வெளிப்படுத்தப் போவதில்லை என்றும் கட்சியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

‘ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போவது, கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவா? அல்லது, களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸவா? என்பதை இப்போது கூறமாட்டேன்.

முற்போக்கு சக்திகளின் சார்பில் நாங்கள் தனித்து வேட்பாளரை நிறுத்தவில்லை. பல அமைப்புகளுடன் இணைந்தே நிறுத்துகிறோம்.

காலிமுகத் திடலில் வரும் 18ஆம் திகதி நடத்தப்படும் பேரணியிலேயே வேட்பாளரின் பெயரை அறிவிக்க வேண்டும் என அவர்களுடன் இணங்கியுள்ளோம். அதற்கு முன்னர், பெயரை வெளியிடுவது நியாயமற்றது.

புலமையாளர்கள், இடதுசாரிக் கட்சிகள், சிவில் அமைப்புகள் இணைந்து இந்த தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம், ஜாதிக ஜன பலவேகய முன்னணியை ஆரம்பித்துள்ளோம்.

எமது வேட்பாளரை அந்த முன்னணியே தீர்மானிக்கும். எமது மாநாடு 18ஆம் திகதி நடக்கும் போது, வேட்பாளர் அறிவிக்கப்படுவார்’ என்றும் அவர் கூறினார்.