தமிழகத்தில் வரும் 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும்?

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகளின் பட்டியலை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின் போது தருமபுரி, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து தருமபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், கடலூர் மற்றும் திருவள்ளூரில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைத்தார்.

இந்நிலையில், தேனி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவில் குளறுபடிகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, தருமபுரி மாவட்டத்தில் 8 வாக்குச்சாவடிகள், தேனி மாவட்டத்தில் இரண்டு வாக்குச்சாவடிகள், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வாக்குச்சாவடியில், வரும் 19 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு
நடைபெறும்.