டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டில் விடாப்பிடியாக தயாரிப்பாளர்கள் நின்றதால், அப்பிரச்சினையிலிருந்து விலகிக் கொண்டது தயாரிப்பாளர் சங்கம்.

ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு’, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தனுஷ் நடித்து தயாரித்துள்ள ‘மாரி 2’ படமும் டிசம்பர் 21-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. இதனால், மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

தயாரிப்பாளர் சங்கத்தின் பட வெளியீடு கட்டுப்பாட்டுக் குழு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சங்கத்துக்குள் கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து 5 படங்களின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருடன் கூட்டாக அமைத்து தயாரிப்பாளர் சங்கம் நேற்று (டிசம்பர் 5) பேச்சுவார்த்தை நடத்தியது.

இக்கூட்டத்தில் எங்களது பட வெளியீட்டுக்கு டிசம்பர் 21-ம் தேதியே சரி என்பதில் தயாரிப்பாளர்கள் விடாப்படியாக இருந்தனர். ஒரே சமயத்தில் 5 படங்கள் வெளியிட்டால் திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் இருக்கும், வசூல் குறையும் என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அறிவுறுத்தினர். ஆனால், டிசம்பர் 21-ம் தேதி வெளியிடும் படத்தின் தயாரிப்பாளர்கள் யாருமே, தங்களது படத்தின் வெளியீட்டை மாற்றியமைப்பதாக இல்லை.

இதனால், டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டில் என்ன பிரச்சினை நடந்தாலும், அதில் தயாரிப்பாளர் சங்கம் தலையிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். இனிமேலும், யார் டிசம்பர் 21-ம் தேதி வெளியீடு என தேதி கேட்டாலும், மறுப்பில்லாமல் கொடுப்பது என ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

டிசம்பர் 21-ம் தேதி 5 படங்களுக்கு எப்படி திரையரங்குகள் ஒதுக்குவது என்ற அதிருப்தியை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் திரையரங்க உரிமையாளர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். தயாரிப்பாளர்களுக்குள்ளே இப்படி ஒற்றுமையில்லாமல் இருந்தால், என்ன செய்வது என்ற அதிருப்தியிலேயே தயாரிப்பாளர் சங்கம் இப்படியொரு முடிவை எடுத்ததாக, சங்கத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.