கேரளாவில் கோகுல் என்பவரின் தாய்க்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இதற்காக அனைவரையும் நெகிழ்ச்சியாக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இது வைரலாகி வருகிறது.

கேரள மாநிலத்தின் கொல்லம் அருகே உள்ள பள்ளிமூன் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் ஸ்ரீதர். இளைஞரான இவரது தாய்க்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இது குறித்து பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கு சில நொடிகளிலேயே 31 ஆயிரம் லைக்குகள் வந்துள்ளன. மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவில் கோகுல் கூறியிருப்பதாவது:

இது எனது அம்மாவின் இரண்டாவது திருமணம் குறித்தது..

இரண்டாவது திருமணத்தை அங்கீகரிக்காதவர்கள் இன்னும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வாழ்க்கை முழுவதையும் எனக்காக அற்பணித்தவர் என் அம்மா. அவரது திருமண வாழ்க்கையில் நிறைய துயரங்களை சந்தித்துள்ளார்.

என் கண் முன்னே நிறைய பார்த்துள்ளேன். நான் 10ஆம் வகுப்பு படித்தபோது, ஒரு முறை அம்மா நெற்றியில் ரத்தம் சொட்ட சொட்ட வீட்டில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது ஏன் இப்படி சகித்துக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்டேன்.

அதற்கு அவர், எல்லாம் உனக்காகத்தான். இப்போது மட்டுமல்ல. இனியும் பொறுத்துக் கொள்வேன் என கூறினார். அது இன்றும் என் நினைவில் உள்ளது. அன்று என் அம்மா வீட்டில் இருந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டு வெளியேறினார்.

அன்று முடிவெடுத்தேன். நிச்சயம் அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் நடத்தி வைப்பேன் என்று. இரண்டாவது திருமணத்துக்கு அம்மா தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்தார்.

எப்படியோ ஒரு வழியாக திருமணத்தை முடித்து வைத்து விட்டேன். இதனை ரகசியமாக வைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அம்மாவுக்கு திருமண வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த பதிவு இப்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது. மேலும் பலரும் கோகுலை பாராட்டி வருகின்றனர்.