தாய்லாந்தில், பசாக் சோன்லாஸிட் அணையின் நீர் மட்டம் சரிந்ததால், 20 ஆண்டுகளுக்கு முன் அணையில் மூழ்கிய புத்தர் கோவில் காட்சியளிக்கிறது.

லோப்புரி மாகாணத்தில் உள்ள இந்த அணையின் நீரை பயன்படுத்திச் சுற்றுபுற 4 மாகாணங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து, நீர் தேக்க பகுதியில் மூழ்கியிருந்த புத்தர் கோவில் மற்றும் அதனை சுற்றியிருந்த 700 வீடுகள் வெளியே தெரிந்தன.

இதனைக்கண்ட புத்தத் துறவிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர், தலையின்றி சிதைவடைந்திருந்த புத்தர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, வழிபட்டனர். கடந்த 2015ஆம் ஆண்டு, அணையின் நீர் மட்டம் இதேபோல் வெகுவாக குறைந்தபோது, இந்த கோவில் வெளியே தெரிந்ததாக அணை அருகே வசிக்கும் சிலர் தெரிவித்தனர்.