மன்னர்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு அப்புறப்படுத்தப்பட்டமை மற்றும் நந்திக்கொடியை காலால் மிதித்து இந்து மதத்தை அவமதித்தமையைக் கண்டித்து இன்று காலை மன்னாரில் இந்து மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் இன்று காலை மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதியில் இடம்பெற்றது. காலை 8.30 மணியளவில் ஆலடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள் மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதிக்குச் சென்றனர். பின்னர் அங்கு வீதியின் இரு பகுதிகளிலும் பல நூற்றுக்கணக்கான இந்து மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளையும், நந்திக் கொடியையும் கையில் ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் தலைவர் தர்ம குமார குருக்கள் தலைமையில் இடம் பெற்ற இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையினர், இந்து மத குருமார்கள், இந்துக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்ட அரச அதிபர் சி.ஏ.மேகன்றாசிடம் தமது கோரிக்கை அடங்கிய மனுவை மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையின் செயலாளரினால் கையளிக்கப்பட்டது.

இதன் போது அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட அரச அதிபர் , அதனை உடனடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில்,கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீண்டும் ஆலடிப்பிள்ளையார் ஆலயம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

கடந்த சிவராத்திரி தினத்தன்று திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கபட்டு அகற்றப்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் அதனை அப்புறப்படுத்தியிருந்தனர்.  அதனைக் கண்டித்தே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.