சென்னை திரையரங்கு வாசலில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு டிக்கெட் கிடைக்காத விரக்தியில் ரசிகர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் நேற்று ரிலீசானது. அஜித் படத்தை எப்போதுமே அவரது ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் நேர்கொண்ட பார்வை படத்தையும் அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியில் மாபெரும் வெற்றியடைந்த அமிதாப்பின் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. ஆனால், தமிழ் ரசிகர்களுக்காக படத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. அஜித் படத்தை எப்படியும் முதல் நாளே பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் திரையரங்கு வாசலில் வரிசையில் நின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை சென்னையில் திரையரங்கு ஒன்றின் வாசலில் அஜித் ரசிகர் ஒருவர் நேர்கொண்ட பார்வை படத்திற்கு டிக்கெட் கிடைக்காத விரக்தியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தெரிய வந்துள்ளது. அதிகாலை ஷோவுக்கு டிக்கெட் கிடைக்காததால், அவர் பெற்றோலை மேலே ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.

விரைந்து செயல்பட்ட பொலிஸார், உடனடியாக அவரைக் காப்பாற்றியுள்ளனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை நடிகர் பாக்கியராஜின் மகனும், நடிகருமான சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.